Bihar: பீகாரில் பெட்ரோல் பங்கில் பெட்ரோல் நிரப்புவதுபோல் வந்து துப்பாக்கி முனையில் ஊழியர்களை மிரட்டி பணத்தை கொள்ளையடித்து சென்ற முகமூடி கொள்ளையர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் சஹர்சா மாவட்டம் பைஜ்நாத்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட திரி பகுதியில் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்கிற்கு 2 பைக்குகளில் முகமூடி அணிந்த நான்கு பேர் வந்துள்ளனர். முதலில் ஒரு நபர் தனது பைக்கிற்கு பெட்ரோல் நிரப்புவதுபோல் வந்து நாடகமாடியுள்ளார். இதையடுத்து பெட்ரோல் நிரப்பப்பட்டவுடன், அவர் தனது பைக்கை நிறுத்திவிட்டு பணம் கொடுப்பதுபோல், பேண்ட் பாக்கெட்டில் கைவிட்டு எடுப்பதுபோல் தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஊழியரை மிரட்டியுள்ளார்.”நீங்கள் ஏதாவது சத்தம் போட்டால், உங்களை சுட்டுவிடுவோம்” என்று எச்சரித்து மற்ற முகமூடி அணிந்த நபர்களும் சேர்ந்து ஊழியர் கழுத்தில் மாட்டியிருந்த பணப்பையை பறித்துக்கொண்டு சென்றனர். அதில் சுமார் ரூ.25000 இருந்ததாக ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதனை தடுக்க முயன்ற வாடிக்கையாளர்களையும் கொள்ளையர்கள் மிரட்டியுள்ளனர். இதனால் அவர்கல் அதிர்ச்சியடைந்து பின்வாங்கினர். இந்த சம்பவம் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ளது. கொள்ளை சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். சஹர்சா காவல் கண்காணிப்பாளர் ஹிமான்ஷுவும் நிலைமையை ஆய்வு செய்தார். குற்றவாளிகளை அடையாளம் காண அதிகாரிகள் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர், மேலும் சுற்றியுள்ள பகுதிகளில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.