Hostages: காசாவில் இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட கத்தார் மற்றும் அமெரிக்கா சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதையடுத்து இருதரப்பு இடையே கடந்த 19-ம் தேதி போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. அன்றைய தினம் பிணைக் கைதிகளாக பிடித்துச் சென்ற 3 இஸ்ரேலியர்களை ஹமாஸ் அமைப்பினர் செஞ்சிலுவை சங்கம் மூலம் விடுவித்தனர். பதில் நடவடிக்கையாக பாலஸ்தீன கைதிகள் 95 பேரை இஸ்ரேல் விடுவித்தது.
இந்நிலையில் மேலும் 4 இஸ்ரேல் பிணைக் கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் செஞ்சிலுவை சங்கம் மூலம் கடந்த 25ம் தேதி விடுவித்தனர். கரீனா ஆரீவ் (20), டேனிலா கிலோபா(20), நாமா லெவி (20), லிரி அல்பாக் (19) ஆகிய நான்கு பெண்களும் இஸ்ரேல் ராணுவத்தில் பணியாற்றியவர்கள். இஸ்ரேல் – ஹமாஸ் இடையே ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தையடுத்து இவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர். இஸ்ரேல் சென்றுள்ள இவர்கள் மருத்துவ பரிசோதனைக்குப் பின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இஸ்ரேல் பெண் வீரர்கள் 4 பேர் விடுதலை செய்யப்பட்டதை அடுத்து, பாலஸ்தீன கைதிகள் சுமார் 200 பேரை இஸ்ரேல் நேற்று விடுவித்தது. காசாவில் பிணைக் கைதிகளாக உள்ள இஸ்ரேலியர்கள் 98 பேரில் இதுவரை 7 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், இஸ்ரேல் – ஹமாஸ் போரால் வாழ்வா, சாவா நிலையில் ஹமாஸ் பிடியில் இருந்த 4 வீராங்கனைகளும் 15 மாதங்களுக்கு பிறகு தங்களுடைய குடும்பத்தினருடன் இணைந்தனர். அப்போது, தாய், தந்தையை கட்டியணைத்து அன்பை பரிமாறிகொள்ளும் வீடியோ பார்வையாளர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. இருப்பினும், ஒவ்வொரு பணயக்கைதிகளும் வீட்டிற்கு வரும் வரை எங்கள் பணி முடிந்துவிடாது.” என்று IDF செய்தித் தொடர்பாளர் RAdm தெரிவித்துள்ளார்.