சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வேப்பநத்தம் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் (30) பெரம்பலூர் மாவட்ட ஆயுதப்படை போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது தலைவாசல் பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவரின் பெற்றோர், ஆத்தூர் அனைத்து மகளிர் காவ்ல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், ”எங்களது மகள் தலைவாசல் பள்ளியில் பிளஸ்2 படித்து வருகிறாள். இந்நிலையில், ஆயுதப்படை காவலரான பிரபாகரன் என்பவர் எங்களது மகளிடம் ஆசைவார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார். இதில், எங்கள் மகள் 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். எனவே பிரபாகரன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மனுவில் கூறியிருந்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், மாணவியை கர்ப்பமாக்கிய பிரபாகரனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளது தெரியவந்தது. இதையடுத்து, பிரபாகரனை ஆத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். ஆனால், சிறிது நேரத்தில் அங்கிருந்து தப்பியோடிய பிரபாகரன், தனது நண்பர்களுடன் பைக்கில் சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும், ஆத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன், அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதையடுத்து, தப்பியோடிய பிரபாகரனை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, அவரை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.