உலக விலங்குகள் தினத்தை முன்னிட்டு தனது தாயாருக்கு நூரி என்ற செல்லப்பிராணி ஒன்றை ராகுல் காந்தி பரிசாக வழங்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தாண்டின் இறுதியில் 5 மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தலும் அடுத்தாண்டு ஏப்ரல் மே மாதங்களில் மக்களவை தேர்தலும் நடத்தப்பட உள்ளது. இந்தநிலையில், கட்சிப் பணிகளில் ராகுல் காந்தி பிஸியாக இருந்து வருகிறார். அந்தவகையில், 146 நாள்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொண்டார். நடைபயணத்தில் பொது மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி தங்களது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் காணொளி ஒன்றை பதிவு செய்துள்ளது. அந்த காணொளியில் மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு அவரது மகனான ராகுல் காந்தி பரிசு ஒன்றை கொடுக்கும் விதமாக உள்ளது. சர்வதேச விலங்குகள் தினத்தை முன்னிட்டு தனது தாய்க்கு ராகுல் காந்தி நூரி எனும் நாய்க்குட்டியை பரிசாக வழங்கியுள்ளார். அந்த பரிசின் மூலம் தங்களது குடும்பத்தின் புதிய உறுப்பினரான நூரியை தனது தாய்க்கு ராகுல் காந்தி அறிமுகப்படுத்துகிறார் என்று பதிவிடப்பட்டுள்ளது.