தவெகவின் 2-ம் ஆண்டு தொடக்க விழா செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் மத்திய – மாநில அரசுகளுக்கு எதிராக #GetOut என வைக்கப்பட்ட பேனரில் தவெக தலைவர் விஜய் முதல் கையெழுத்திட்டார். இதனைத் தொடர்ந்து, தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோரும் பேனரில் கையெழுத்திட்டனர். இதை தொடர்ந்து தவெக நிர்வாகிகள் அதில் கையெழுத்திட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தவெக தலைவர் விஜய், பிரசாந்த் கிஷோரை ஆங்கிலத்தில் வரவேற்றார். தொடர்ந்து என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே என உரையை தொடங்கிய விஜய், “அரசியலில் மட்டும் தான் வித்தியாசமான ஒன்றை பார்க்கலாம்.. யார் யாரை எப்போது எதிர்ப்பார்கள் என தெரியாது.. அரசியலுக்கு யார் வேணாலும் வரலாம்னு சொல்லுவாங்க.. ஆனா மக்களுக்கு பிடித்த ஒருவர் வந்தால் ஒரு சில பேருக்கு எரிச்சல் வர தான செய்யும்..
தற்போது பதவியில் இருப்பவர்கள் பண்ணையார்களாக இருக்கிறார்கள்.. தமிழக வெற்றிக் கழகம் பண்ணையார்களுக்கானது கிடையாது. விரைவில் தவெக பூத் கமிட்டி மாநாடு நடைபெறும். 69 ஆயிரம் பூத்களுக்கு நிர்வாகிகளை நியமிக்க உள்ளோம். மும்மொழி கொள்கை விவகாரத்தில் திமுக பாஜக செட்டிங்க்.. LKG – UKG பசங்க போல் மத்திய மாநில அரசு சண்டை போடுவது போல் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வளவு பெரிய பிரச்சனைக்கு நடுவில் ஹேஸ்டாக் போட்டு விளையாடிக்கொண்டு இருக்கிறார்கள். தமிழர்கள் சுயமரியாதையை மட்டும் எப்போதும் யாருக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.. தனிப்பட்ட முறையில் யார் எந்த பள்ளியில் வேணாலும் படிக்கலாம். எந்த மொழி வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். கூட்டாச்சி தத்துவத்திற்கு எதிராக வேறு மொழியை திணிக்க கூடாது. 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் நிச்சயம் வரலாறு படைக்கும்” என பேசினார்.