PM SWANidhi: வாழ்வாதாரத்தை இழந்த தெருவோர வியாபாரிகளுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் மத்திய அரசு கடன் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பிரதம மந்திரி தெருவோர வியாபாரி தற்சார்பு நிதியுதவித் திட்டத்தை ( PM SWANidhi ) மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. தொழில் தொடங்குவதற்கான மூலதன நிதியுதவி இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. இந்த திட்டமானது கடந்த 2020 -ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்த தெருவோர வியாபாரிகளுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், வணிகர்கள் தங்களது தொழிலை எளிதாக தொடங்க முடியும்..
அந்தவகையில், 2025 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் உரையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிரதமரின் சுவநிதி திட்டம் 68 லட்சத்திற்கும் மேற்பட்ட தெருவோர வியாபாரிகளுக்கு அதிக வட்டி விகித முறைசாரா துறை கடன்களிலிருந்து நிவாரணம் அளித்துள்ளதாகக் கூறினார். இது ரூ.10,000, ரூ.20,000 மற்றும் ரூ.50,000 வரை பிணையமில்லாத பணி மூலதனக் கடன்களை வழங்குகிறது. இந்தத் திட்டம், கடனைத் தொடர்ந்து திருப்பிச் செலுத்துவதற்கு ஆண்டுக்கு 7 சதவீத வட்டி மானியத்தையும், பரிந்துரைக்கப்பட்ட டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு ஆண்டுக்கு ரூ.1200 வரை கேஷ்பேக்கையும் வழங்குகிறது. மேலும், கடன்களுக்கு முன்கூட்டிய அடைப்புக் கட்டணங்கள் எதுவும் இல்லை.
பிரதமர் ஸ்வநிதிக்கான தகுதி என்ன? இந்தத் திட்டத்தின் கீழ் தெருவோர வியாபாரம் செய்கின்ற எந்தவொரு வியாபாரியும் கடன் பெற முடியும். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் வழங்குகின்ற தெருவோர வியாபாரி என்ற அடையாள அட்டை, அங்கீகாரச் சான்று பெற்றும் அடையாள அட்டை கிடைக்கப் பெறாத வியாபாரிகள் அடங்குவர். மேலும், கணக்கெடுப்பு பணியின்போது விடுபட்ட போன தெருவோர வியாபாரி உள்ளாட்சி விற்பனைக் குழுவிடம் இருந்து பெறப்படும் பரிந்துரைக் கடிதத்தின் மூலம் கடனை பெறலாம். குறிப்பாக நகர்ப்புறம் அல்லது கிராமப்புறத்தைச் சேர்ந்த வியாபாரிகள் இதன் மூலம் பயன் பெற முடியும்.
பிரதம மந்திரி ஸ்வநிதி திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது? தெருவோர வியாபாரிகள் நேரடியாக PM SWANidhi போர்ட்டலில் அல்லது தங்கள் பகுதிக்கு அருகிலுள்ள பொது சேவை மையம் (CSC) மூலம் விண்ணப்பிக்கலாம்.
PM SWANidhi இப்போது மூடப்பட்டுவிட்டதா? PM SWANidhi திட்டத்தின் கீழ் கடன் வழங்கும் காலம் டிசம்பர் 31, 2024 அன்று முடிவடைந்தது. ஜனவரி 01, 2025 முதல் அனைத்து கடன் தவணைகளுக்கும் புதிய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது. இருப்பினும், நிதியமைச்சர் சீதாராமன் பட்ஜெட் உரையில், வங்கிகளிடமிருந்து மேம்படுத்தப்பட்ட கடன்கள், ரூ.30,000 வரம்புடன் கூடிய UPI-இணைக்கப்பட்ட கிரெடிட் கார்டுகள் மற்றும் திறன் மேம்பாட்டு ஆதரவுடன் இந்தத் திட்டம் புதுப்பிக்கப்படும் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.