குறைந்த வட்டியில் ரூ.10,000 முதல் ரூ.1 லட்சம் வரை சிறு வணிகக்கடன் வழங்கப்படும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார்.
கடந்த வாரம் வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயலால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி நிலைகுலைந்தது. தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளர்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் சிறு வணிகக் கடன் திட்ட முகாம் நடத்தப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில்புயலால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்களுக்காக சிறப்பு சிறு வணிகக் கடன் திட்ட முகாம் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இந்த சிறப்பு முகாம்கள் கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலமாக நடைபெறும். இந்த முகாம் மூலமாக தகுதியானவர்களுக்கு குறைந்த வட்டியில் ரூ.10,000 முதல் ரூ.1 லட்சம் வரை சிறு வணிகக்கடன் வழங்கப்படும் என்றும் இந்த முகாம் வரும் 12ஆம் தேதி வரை நடைபெறும்” என்றும் தெரிவித்துள்ளார்.