2023ஆம் ஆண்டின் முதல் நாளான இன்று முதல், வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை 25 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றங்கள் அடிப்படையில் அவற்றின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. மாதத்தின் முதல் நாளில் வீடுகளில் பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்படுகிறது. இன்று ஜனவரி 1ஆம் தேதி என்பதால், விலை நிலவரத்தை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன.கடந்த மாதங்களைப் போலவே வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே விலையில் நீடிக்கிறது. ஆனால் வர்த்தக ரீதியான சமையல் சிலிண்டரின் விலை ரூ.25 உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
அதன்படி 19 கிலோ எடையுள்ள வர்த்தக ரீதியான சமையல் சிலிண்டர் விலை டெல்லியில் ரூ.1768 ஆகவும், மும்பையில் ரூ.1721 ஆகவும், சென்னையில் ரூ.1917 ஆகவும், கொல்கத்தாவில் ரூ.1870 ஆகவும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக, உணவகங்கள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. உணவுகளின் விலையும் கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த விலை உயர்வுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. புத்தாண்டின் முதல் பரிசாக, வணிக பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இப்போது 25 ரூபாய் உயர்ந்துள்ளது. இது வெறும் ஆரம்பம் தான் என காங்கிரஸ் கட்சி டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.