அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து குடும்ப தலைவிகளுக்கு மாத தொடக்கத்தில் 1000 ரூபாய் வழங்கப்படலாம்.
குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் குடும்ப தலைவிகள் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டு மாதந்தோறும் ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் உதவி தொகை கிடைக்காத மகளிர் மேல்முறையீடு செய்யலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதன்படி 11,85,000 ஆயிரம் பேர் மேல்முறையீடு செய்தனர். மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு தகுதியானவர்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்பட்டது. மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் ஸ்டாலின் 10-ம் தேதி தொடங்கி வைத்தார்.
இவர்கள் அனைவருக்கும் மாதத்தின் இரண்டாவது வாரம் தான் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் நேரடியாக செலுத்தப்படுகிறது. இதனை மேலும் பயனுள்ளதாக மாற்றும் விதமாக மாத தொடக்கத்திலேயே ஆயிரம் ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து குடும்ப தலைவிகளுக்கு மாத தொடக்கத்தில் 1000 ரூபாய் வழங்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது.