Mukesh Ambani: மகா கும்பமேளாவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி தனது மனைவி, மகன்கள், மருமகள்கள், பேரக்குழந்தைகளுடன் சங்கமத்தில் நீராடினார்.
இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் யாரென்றால் முகேஷ் அம்பானிதான் என்று இந்தியாவில் அனைவருமே கூறுவார்கள். அந்த அளவிற்கு முகேஷ் அம்பானியும், அவரது குடும்பத்தினரும் இந்தியா முழுவதும் புகழ் பெற்றவர்களாக உள்ளனர். சமீபத்தில் நடந்த முகேஷ் அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் திருமணத்தை 5000 கோடி செலவில் நடத்தி உலகையே ஆச்சரியப்படுத்தினர். முகேஷ் அம்பானி அவரது மனைவியான நீதா அம்பானி மற்றும் மற்ற குடும்ப உறுப்பினர்களுடன் உலகின் மிக ஆடம்பரமான வீடுகளில் ஒன்றான ஆன்டிலியாவில் வசிக்கிறார். 27 மாடிகளை கொண்ட இந்த பிரம்மாண்ட வீட்டின் 27 வது மாடியில் அம்பானி குடும்பத்தினர் அனைவரும் வசிக்கின்றனர்.
இந்தநிலையில், உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவையொட்டி, திரிவேணி சங்கமத்தில் கோடிக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர். இம்மாதம் 26-ஆம் தேதி வரை தொடர்ந்து 45 நாட்களுக்கு இந்த கும்பமேளா நடைபெறும். இதனையொட்டி உத்தரப்பிரதேச மாநிலத்தில் கோடிக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். குடியரசு தலைவர், திரௌபதி பிரதமர் மோடி, அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட ஏராளமான விஐபிகள் மகா கும்ப மேளாவில் திருவேணி சங்கமத்தில் புனித நீராடினார்கள். அந்தவகையில், முகேஷ் அம்பானி, தாய் கோகிலாபென் அம்பானி, தனது மனைவி நீதா அம்பானி, அவரது மூத்த மகன் ஆகாஷ் அம்பானி, அவரது மனைவி ஸ்லோகா அம்பானி மற்றும் இரு குழந்தைகளான பிருத்வி மற்றும் வேதா, முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் அவரது மனைவி ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரும் சங்கமத்தில் நீராடினர்.