மகாராஷ்டிரா அரசு மாநிலத்தில் உள்ள விவசாயிகளுக்கு புதிய நிதித் திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் கீழ் மாநிலத்தில் உள்ள ஒரு கோடிக்கும் அதிகமான பயனாளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் ரூ.6,000 வழங்கப்படும். நமோ ஷேத்காரி மகாசன்மன் யோஜனா எனப் பெயரிடப்பட்ட இந்தத் திட்டத்துக்கு, செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஒப்புதல் அளித்தார்.
இந்த தொகையானது, பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு தவணை முறையில் வழங்கப்படும் ரூ.6,000க்கு கூடுதலாக வழங்கப்படும் என்று முதல்வர் கூறினார். முன்னதாக சட்டசபையில் மாநில பட்ஜெட் தாக்கல் செய்தபோது, மத்திய அரசின் முதன்மையான PM-KISAN திட்டத்தின்படி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு தனது அரசாங்கம் ஆண்டுக்கு ரூ.6,000 செலுத்தும் என்று துணை முதல்வர் ஃபட்னாவிஸ் கூறினார்.
விவசாயிகளுக்கு நேரடி பணப்பரிவர்த்தனைக்காக ரூ.6,900 கோடி செலவை மாநில அரசு ஏற்கும் என்றும், இதன் மூலம் 1.15 கோடி விவசாயக் குடும்பங்கள் பயன்பெறும் என்றும் அவர் கூறியிருந்தார். இது தவிர, விவசாயிகளுக்கு வெறும் 1 ரூபாய்க்கு பயிர் காப்பீடு வழங்கப்படும் என்றார்.