வட அமெரிக்க நாடான கனடாவில் தேசத் தந்தை மகாத்மா காந்திஜியின் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் உலகெங்கிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கனடா நாட்டின் ஹாமில்டன் நகரில் உள்ள சிட்டி ஹால் என்ற பகுதியில் மகாத்மா காந்தியின் சிலை அமைந்திருக்கிறது. கடந்த வாரம் சில சமூக விரோதிகள் இந்த சிலையை சேதப்படுத்தியதோடு இந்த சிலைக்கு அருகே பெயிண்டின் மூலம் இந்திய இறையாண்மைக்கு எதிரான வசனங்களையும் வாசகங்களையும் எழுதி இருக்கின்றனர். மேலும் தனி நாடு கூறும் காலிஸ்தான் கொடியும் அந்த சிலையின் அருகே வைக்கப்பட்டிருக்கிறது.
இச்சம்பவத்தில் உடனடியாக செயல்பட்ட கனடா காவல்துறையினர் இது தொடர்பாக தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். சிலையின் மீது தெளிக்கப்பட்ட பெயிண்ட் மற்றும் அதனைச் சுற்றி எழுதப்பட்ட இந்திய இறையாண்மைக்கு எதிரான வசனங்கள் ஆகியவை உடனடியாக அகற்றப்பட்டு விட்டன. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஹாமில்டன் காவல்துறை “இந்திய அரசால் கனடாவிற்கு பரிசாக வழங்கப்பட்ட ஆறு அடி உயரமுள்ள வெண்கல காந்தி சிலை கடந்த புதன்கிழமை சேதப்படுத்தப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்திருக்கிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை செய்து வருவதாகவும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறது. சம்பவம் தொடர்பாக எந்த ஒரு கைது நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் சிலை கனடாவில் சேதப்படுத்தப்பட்டிருப்பது உலகெங்கிலும் வாழும் இந்தியர்கள் மட்டுமல்லாமல் அனைத்து மக்களையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.