294 சட்டசபை தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில் தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு 220 எம்எல்ஏக்களும், கூட்டணி கட்சியான பிஜிபிஎம் கட்சிக்கு ஒரு எம்எல்ஏவும், எதிர்க்கட்சியாக உள்ள பாஜகவுக்கு மொத்தம் 69 எம்எல்ஏக்கள் உள்ளன. இங்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக பதவி வகித்து வருகிறார்.
இங்கு மாநில எம்எல்ஏக்களுக்கு சம்பளம் மற்றும் அலோவன்ஸ் என மாதம் ரூ.81 ஆயிரம் கிடைத்து வந்தது. இந்நிலையில் எம்எல்ஏக்களுக்கான மாதசம்பளத்தை திடீரென ரூ.40 ஆயிரம் வரை உயர்த்தி அம்மாநில முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். முதலமைச்சரின் சம்பளத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்றார்.
இது குறித்து அறிவிப்பை வெளியிட்ட மம்தா பானர்ஜி, மேற்கு வங்க சட்டசபை எம்.எல்.ஏ.க்களின் சம்பளம் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு. இதனால் எம்எல்ஏக்களுக்கான சம்பளம் என்பது ரூ.40 ஆயிரம் வரை உயர்த்தி வழங்கப்படுகிறது என அறிவித்துள்ளார். அதன்படி சம்பளம் மற்றும் அலோவன்ஸ் என மாதம் ரூ.81 ஆயிரம் பெற்று வந்த எம்எல்ஏக்கள் இனி ரூ.1.21 லட்சம் வரை பெறுவார்கள். அதேபோல் அதேபோல் சம்பளம் மற்றும் அலோவன்ஸ் என மாதம் ரூ.1.10 லட்சம் பெற்று வந்த அமைச்சர்கள் இனிமேல் ரூ.1.50 லட்சம் வரை பெற உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.