லண்டனில் மறைந்த எலிசபெத் ராணியின் உடல் வைக்கப்பட்டுள்ள இடத்தை நோக்கி அந்நாட்டு சட்டத்திற்கு புறம்பாக ஓடிவந்தவரை போலீஸ் கைது செய்தது.
லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கத்தில் மறைந்த ராணி 2ம் எலிசபெத் உடல் சவப்பெட்டிக்குள்வைக்கப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதை பல ஆயிரக்கணக்கானோர் வரிசையில் நின்று ஒவ்வொருவராக அஞ்சலி செலுத்திவிட்டுச் செல்கின்றனர். சுமார் 24 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கும் மக்கள் பொறுமையாக மழை , வெயில் என எதையும் பார்க்காமல் அமைதியான முறையில் அஞ்சலி செலுத்திவிட்டுச் செல்கின்றனர்.
ராணியின் உடல் அரங்கத்தின் நடுவில் சிவப்பு நிறத்தால் ஆன சதுவடிவில் அடுக்கடுக்காக கட்டப்பட்டுள்ள மேடைக்கு நடுப்பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. ராணியைச் சுற்றி பத்து காவலாளிகள் பணியில் நின்று கொண்டிருக்கின்றார்கள். ஒவ்வொரு மேடை படியிலும் 4 பேர் என நிற்கின்றனர். தலைப்பகுதியில் 4 பேர் சுற்றி நின்றுள்ளனர். ராணிக்கு அஞ்சலி செலுத்த வருபவர்கள் சற்று தூரம் நின்றவாறு அஞ்சலி செலுத்திவிட்டு அடுத்தடுத்து வருபவர்களுக்கு வழிவிட்டுச் செல்ல வேண்டும்.
இந்நிலையில் இளைஞர் ஒருவர் வரிசையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென ஓடி வந்து சிவப்பு நிற படிக்கட்டுகள் மீது ஏறி ராணியின் சவப்பெட்டியை நோக்கி ஓடினார். இதையடுத்து போலீசார்அவரை தடுத்து நிறுத்தி கைது செய்து அழைத்துச் சென்றனர். அந்நாட்டு சட்டத்தை மீறி செயல்பட்டதற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனால் அரங்கத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதை நிறுத்தப்பட்டு வெளியில் அனுப்பப்பட்டனர். பின்னர் இந்த சலசலப்பு குறைந்ததும் வரிசையாக மீண்டும் நின்று அஞ்சலி செலுத்தினார்கள். 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு அரசியாருக்கு அஞ்சலி செலுத்த வரிசை நீண்டுச் செல்கின்றது. இதனிடையே பிரபல கால்பந்தாட்ட வீரர் டேவிட் பெக்காம் வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினார்.
ராணியின் உடல் வைக்கப்பட்டுள்ள சவப்பெட்டியை விழித்திருந்து கண்காணிக்கும் பணியில் அரசர் 3-ம் சார்லஸ் , இளவரசி ஆனி , இளவரசர் ஆன்ட்ரூ, எட்வர்ட் ஆகியோரும் ஈடுபட்டனர். அவர்களின் வாரிசுள் மற்றும் பேரப்பிள்ளைகளும் பணியாற்றினார்கள்
வேல்ஸ் இளவரசர் வில்லியம் , அவரது சகோதரர் ஹாரி மற்றும் சாரா திண்டால் , பீட்டர் பிலிப், இளவரசர் பியாட்ரைஸ் , யூஜின் , லேடி லூய்ஸ் வின்ட்சர் மற்றும் விஸ்கவுண்ட் ஜேம்ஸ் செவர்ன் ஆகியோரும் சனிக்கிழமை நடந்த கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கண்காணிப்பு பணியின்போது மிலிட்டரி ஆடையைஅணிய வேண்டும் என வலியுறுத்தப்பட்டதை அடுத்து இளவரசர் ஹாரி ஆகியோர் மிலிட்டரி உடையில் இருந்தனர் . இளவரசர் ஹாரி மேகன் மார்க்ளேவை திருமணம் செய்து கொண்டு அதனால் ஏற்பட்ட பிரச்சனையில் அமெரிக்க சென்றதையடுத்து அரசகுடும்ப பணிகளில் இருந்த அவர் ஒதுங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மீண்டும் மிலிட்டரி ஆடையை அணிந்துள்ளார்.