விருதுநகர் மாவட்டம், சிவகாசி சிவகாமிபுரம் காலனியை சேர்ந்தவர் கருப்பசாமி. பட்டாசு தொழிற்சாலையில் வேலை செய்து வரும் இவருக்கு, கற்பகம் என்ற மனைவியும், 4 மற்றும் 2 வயதில் இரு மகள்கள் உள்ளனர். இவரது மனைவி கற்பகம் அச்சகம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், கற்பகத்திற்கும் முருகன் காலனியை சேர்ந்த மாரிமுத்து என்ற நபர் ஒருவருக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்துள்ளது.
ஒரு கட்டத்தில், தனது மனைவியின் கள்ளத்தொடர்பு குறித்து கருப்பசாமிக்கு தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த கருப்பசாமி தனது மனைவி கற்பகம் மற்றும் மாரிமுத்துவை கண்டித்துள்ளார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, கருப்பசாமி மற்றும் மாரிமுத்து இருவரும் செல்போனில் பேசியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட பிரச்சனையில், சமரசம் பேசிக் கொள்ளலாம் என்று கூறி, மாரிமுத்து கடந்த 9ம் தேதி கருப்பசாமிக்கு போன் செய்துள்ளார். அவரது பேச்சை நம்பி, கருப்பசாமி மாரிமுத்து சொன்ன இடமான சிவகாமிபுரம் காலனியிலிருந்து முருகன் காலனி செல்லும் வழியிலுள்ள தனியார் பட்டாசு ஆலைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு மாரிமுத்து, அவரது சகோதரர் குமார், பட்டாசு ஆலை ஒப்பந்ததாரர் கணேசன், ஜோசப் ஆகிய 4 பேர் இருந்துள்ளனர்.
அவர்கள் நான்கு பேரும் சேர்ந்து, கருப்பசாமியை அரிவாளால் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பியோடியுள்ளனர். சம்பவம் குறித்து அறிந்த போலீசார், 2 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். அப்போது, பாறைப்பட்டி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பதுங்கி இருந்த 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், முதல் குற்றவாளியான மாரிமுத்து பட்டாசு ஆலையில் பணிபுரியும் சக பெண் தொழிலாளர்களை காதலிப்பதாக ஏமாற்றி பாலியல் தொல்லை கொடுத்து தெரியவந்துள்ளது.
மேலும், பட்டாசு ஆலை ஒப்பந்ததாரரான கணேசன் மீது ஏற்கனவே 5 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளது. போனில் பேசிய போது கருப்பசாமி மாரிமுத்துவை ஆபாசமாக பேசியதால், ஆத்திரத்தில் அவர் கருப்பசாமியை திட்டமிட்டு வரவழைத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது.