உத்தர பிரதேசத்தின் முசாபர்நகரில் மீராப்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட சிக்கந்தர்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் 20 வயதான தபசும். இவர் கடந்த 2022-ம் ஆண்டில் இஸ்திகார் என்பவரின் மகன் முதசீரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆனது முதல் இஸ்திகார் அவரது மருமகளான தபசுமை இச்சையான பார்வையோடு அணுகியுள்ளார். இந்நிலையில், கடந்த ஜூலை 5-ம் தேதி, முதசீர் அவரது தாயை மீராப்பூரில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்து சென்றுள்ளார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்ட இஸ்திகார் தனது மருமகளை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு யாரிடமும் சொல்ல கூடாது என மிரட்டியுள்ளார்.
இந்நிலையில், மாலையில் வீடு திரும்பிய கணவர் மற்றும் மாமியாரிடம் தனக்கு நடந்ததை பற்றி தபசும் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ந்த முதசீர், அவரது மனைவியிடம் “நீ என்னுடைய தந்தையின் மனைவியாகி விட்டாய். அதனால், நீ எனக்கு தாயாராகி விட்டாய். இனி உன்னுடன் என்னால் ஒன்றாக வாழ முடியாது” என்று கூறி தபசுமை அடித்து உதைத்து வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளார். முதசீரின் தாயாரும் சேர்ந்து தபசுமை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதனால் மனம் உடைந்த தபசும், தனது தந்தையின் வீட்டுக்கு சென்றுள்ளார். பின்னர், சம்பவம் குறித்து அறிந்த தபசுமின் உறவினர்கள் மற்றும் தபசும் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதில், கணவர், மாமியார் மற்றும் மாமனார் ஆகியோருக்கு எதிராக நீதி கேட்டு புகார் அளிக்கப்பட்டது. இஸ்திகார் மீது பலாத்காரம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருமகளை மாமனார் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதில் பெரும் பரபரப்பை ஏற்பாடுத்தி உள்ளது.