உத்தரப்பிரதேசம், சந்தவுலி மாவட்டத்தில் உள்ள ஹமித்புர் கிராமத்தில் மெக்தாப் என்ற நபர் ஒருவர் வசித்து வருகிறார். பெரியவர்களின் ஏற்பாட்டில் இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 22 ஆம் இவர்களுக்கு திருமணம் நடைபெற அனைத்தும் தயாராக இருந்தது. அந்த வகையில், பெண் வீட்டார் மெக்தாப் குடும்பத்தினரை இனிப்பு கொடுத்து பாரம்பரிய முறைப்படி வரவேற்றனர். பின்னர், மணமகன் வீட்டார் சிலருக்கு சப்பாத்தி பரிமாற தாமதம் ஆகியுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மணமகன் வீட்டார் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் திருமண நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறினர்.
அப்போது மணமகள் வீட்டார் பேசி சமாதனம் செய்து விடலாம் என்று நினைத்துள்ளனர். ஆனால், மணமகன் மெக்தாப் இரவோடு இரவாக மாயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மணமகனை தேடியுள்ளனர். பின்னர் தான் தெரிந்தது, சப்பாத்திக்காக மணமகன் திருமணத்தையே நிறுத்திவிட்டார் என்று. மேலும், அவர் ஒரு சில நாட்களிலேயே, அவரது உறவுக்காரப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண் வீட்டார், திருமணத்திற்காக வரதட்சணையாக கொடுத்த ஒன்றரை லட்சம் ரூபாய், மற்றும் 7 லட்சம் ரூபாய் செலவை திருப்பி கொடுக்குமாறு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.