மஹாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டம் பவுட் கிராமத்தில் உள்ள பழமையான நாகேஷ்வர் கோவில், தற்போது மதவெறி சார்ந்த பரபரப்பு சம்பவத்தால் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. கோவில் வளாகத்தில் உள்ள அன்னபூரணி அம்மன் சிலை மீது, ஒரு இளைஞர் திட்டமிட்டு சிறுநீர் கழித்து, அந்த சிலையை தரையில் வீசி சேதப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் கோவில் வளாகத்தில் உள்ள சிசிடிவி கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. அதில், புனே நகரைச் சேர்ந்த சந்த் நௌஷாத் ஷேக் (19) என்ற இளைஞர் கோவிலுக்குள் நுழைந்து, முழுமையான திட்டத்துடன் அம்மன் சிலையை கீழே வீசி உடைத்ததோடு, அதன்மீது சிறுநீர் கழித்து, பக்தர்களின் மத உணர்வுகளை கேள்விக்குள்ளாக்கும் செயலில் ஈடுபட்டுள்ளான்.
இந்தக் காணொளி சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியதுமே, மக்கள் கடும் கோபத்துடன் இது போன்ற மதவெறிச் செயல்கள் நாட்டில் அதிகரிக்கக் கூடாது என போராட்ட குரலை எழுப்பினர். “#ProtectTemples”, “#ReligiousHateCrime”, “#JusticeForAnnapoorani” எனும் ஹாஷ்டேக்குகள் ட்ரெண்டாகியுள்ளன.
போலீசார் விரைந்து விசாரணை நடத்தியதில், சந்த் ஷேக் மட்டும் இல்லாமல், அவனது தந்தை நௌஷாத் ஷேக் என்பவரும் சம்பவத்தில் தொடர்புடையவர் என உறுதி செய்யப்பட்டது. இருவரும் பவுட் காவல் நிலைய போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது BNS பிரிவுகள் 196 (தீண்டாமை குற்றம்), 298 (மத உணர்வுகளைத் தூண்டுதல்), 299, 302 (தீங்கு விளைவித்தல்), 351(2), 3(5) உட்பட பல பிரிவுகள் சேர்த்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சம்பவத்தையடுத்து, பவுட் கிராமம் மற்றும் கோவில் சுற்றுவட்டாரத்தில் பாதுகாப்பு காரணமாக அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நிலைமை தற்போது கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், பாதுகாப்புக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஹவேலி துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் புஜாரி தெரிவித்துள்ளார்.
நாகேஷ்வர் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் பூஜை செய்வதுடன், அன்னபூரணி அம்மன் சிலை மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இந்தச் செயல் அந்த பக்தியையும் நம்பிக்கையையும் குலைக்கும் செயல் என மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து, பலர் அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டு, “மதநம்பிக்கையை அவமதிக்க முயன்றவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும்” என கோரிக்கை வைக்கின்றனர்.
இந்தச் சம்பவம் சமூகத்தில் மட்டுமன்றி, அரசியலிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பாஜக, மகாராஷ்டிரா நவநிர்மாண சேனா (MNS) உள்ளிட்ட கட்சிகள் இந்தச் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. “இது திட்டமிட்ட மத விரோத செயல்” என சுட்டிக்காட்டியுள்ளனர்.