தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. புயலாக வலுவடைந்து வட தமிழ்நாடு – தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு “மாண்டாஸ்” என பெயரிடப்பட்டுள்ளது. புயல் எதிரொலியாக 8ம் தேதி, 09 மற்றும் 10ம் தேதி தஞ்சாவூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் 9-ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மாண்டாஸ் புயல் காரணமாக சென்னையில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டுப் பணிகள் தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி அனைத்து மாநகராட்சி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து முக்கிய அறிவிப்புகளை அவர் வழங்கினார். அதன்படி “கடந்த மழையின்போது தண்ணீர் அதிகம் தேங்கிய இடங்களில் மோட்டார்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
உணவு மற்றும் எரிபொருளுக்கு தேவையான பணம் கையிருப்பு இருப்பதை மண்டல அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். இயந்திரவியல் துறை 50 டிராக்டர் பம்புகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மண்டல கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் ஊழியர்கள் பணியில் இருக்க வேண்டும். ஒவ்வொரு வார்டிலும் 10 பேர் கொண்ட ஒரு வாகனம் தயார் நிலையில் இருக்க வேண்டும். நிவாரண மையங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
மேலும் வாகனம் அனைத்தும் சோதனை செய்யப்பட்டு தயார் நிலையில் இருக்க வேண்டும். அனுமதி இல்லாத பேனர்களை அகற்ற வேண்டும். மர அறுவை மற்றும் வெட்டி அகற்றும் சக்திமான் எந்திரம் ஆகியவை தயார் நிலையில் இருக்க வேண்டும். மாநகராட்சியின் மின்சார துறை மின்வாரியத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும். சுரங்கப்பாதை மேட்டார் ஊழியர்கள் 24 மணி நேரம் பணியில் இருக்க வேண்டும். காலை 7 மணி முதல் வண்டல் தொட்டிகளை தூய்மைபடுத்த வேண்டும்.
தனியார் நிறுவனங்களின் தூய்மை பணியாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். மழைநீர் வடிகால் பணிகளை செய்த ஒப்பந்தாரர்கள் மேட்டார்களை தயார் நிலையில் இருக்க வேண்டும். அனைத்து வார்டுகளிலும் மருத்துவ குழுக்கள் தயாராக இருக்க வேண்டும். போதுமான மருந்துகள் மருத்துவமனைகளில் இருப்பு இருப்பதை உறுதி செய்து வேண்டும். அதிக அளவு தண்ணீர் தேங்கும் இடங்களில் படகுகள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.