நடிகரும் இயக்குனருமான மனோஜ் பாரதிராஜா காலமானார். திரைத்துறையில் தொடர்ந்து விடாமுயற்சியுடன் இயங்கி வந்தவர் என்ற வகையில் மனோஜ் பாரதிராஜாவின் திரை பயணம் மிக நீண்டது. தந்தை பாரதிராஜா மிகப் புகழ்பெற்ற இயக்குனரானாலும் நடிப்பின் மீதும், சினிமா மீதும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதை முறையாக பயில அமெரிக்காவில் தியேட்டர் ஆர்ட்ஸ் கற்றார்.
மனோஜின் திரை பயணத்தில் முதல் படமாக 1999 இல் உருவான தாஜ்மஹால் இருக்கிறது. மணிரத்தினம் திரைக்கதையில் அவரது தந்தை பாரதிராஜா இயக்கத்தில் உருவானது. இப்படத்தின் அறிவிப்பு முதல் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. ஏ.ஆர். ரகுமான் இசையில் இப்படத்தின் பாடல்கள் பட்டித் தொட்டி எங்கும் சென்று சேர்ந்தது. அதனைத் தொடர்ந்து மனோஜ் நடித்த படம் சமுத்திரம். கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார், முரளியுடன் முக்கியமான பாத்திரத்தில் நடித்திருந்தார்.
இதில் மிக எதார்த்தமான தோற்றமும் நடிப்பும் அவரை அந்த படத்தில் பலரையும் கவனிக்க வைத்தது. பேருந்து நிலையத்தில் முரளி இடம் மனோஜ் பணம் வாங்கும் அந்த காட்சி இப்போதும் மிக பிரபலம். அல்லி அர்ஜுனா. வருஷமெல்லாம் வசந்தம் போன்ற படங்களில் ஹீரோவாக வலம் வந்தவர், சாதுரியன் படத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒரு இடைவெளி எடுத்தார். அந்த காலகட்டத்தில் தான் அவர் காதலித்த நடிகை நந்தனாவுடன் அவருக்கு திருமணம் நடைபெற்றது.
நடிப்பில் இருந்து 7 வருடங்களாக விலகி இருந்தவர் 2013இல் மீண்டும் களமிறங்கினார். இம்முறை ஹீரோவாக அல்ல வில்லனாக. அவரை ஹீரோவாக மாற்றிய தந்தை பாரதிராஜாவே மனோஜின் வில்ல முகத்தையும் அன்னகுடி படைத்தில் வெளிக்கொண்டு வந்தார். தொடர்ந்து பல படங்களில் நடித்தவர். வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படத்தில் மீண்டும் கவனிக்க வைக்கும் படியான நடிப்பை கொடுத்தார்.

பல காலமாக இயக்குனராகவும் ஆசைப்பட்டார். பாரதிராஜா இயக்கிய சிவப்பு ரோஜாக்கள் படத்தின் இரண்டாம் பாகத்தை மனோஜ் இயக்குவார் என்ற அறிவிப்புகள் எல்லாம் வந்தாலும் மார்கழி திங்கள் படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். தன்னை நடிகராக அறிமுகம் செய்த தந்தை பாரதிராஜாவை அப்படத்தின் இயக்கியிருந்தார் மனோஜ். இப்படி பல விஷயங்கள் செய்தவர் ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கிய எந்திரன் படத்தில் முக்கிய பங்காற்றினார்.

ரோபோ ரஜினி, சயின்டிஸ்ட் ரஜினி இணைந்து வரும் சில காட்சிகளில் ரோபோ ரஜினிக்கு உடல் கொடுத்து நடித்திருப்பார் மனோஜ். திரைத்துறையில் 25 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட பயணம், பல நண்பர்கள், பாரதிராஜாவின் திரைப்படக் கல்லூரியில் முக்கிய பொறுப்பு என பலவும் அவரது பயணத்தில் செய்தவை. பாரதிராஜா உடல் நலத்தை உடன் இருந்து கவனித்தும் வந்தார் மனோஜ். இந்த சூழல் ஏற்பட்டிருக்கும் அவரின் மறைவு, திரைத்துறையினர் அனைவரையும் அதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது. திரைத்துறையினரும், முக்கிய பிரமுகர்களும், ரசிகர்களும் அவரது இறப்புக்கு தங்கள் இரங்கலை பதிவு செய்து வருகின்றன.