’மாண்டஸ்’ புயலின் காரணமாக புதுச்சேரி மாநிலத்தில் பேனர்கள், கட்- அவுட், பிளக்ஸ்கள், விளம்பரப் பலகைகள் வைக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரிக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே நாளை புயல் கரையை கடக்க இருக்கிறது. புயலின் காரணமாக நாளை நள்ளிரவு முதல் காற்றின் வேகம் மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இன்று முதல் 10ஆம் தேதி வரை கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. இதனால், புதுச்சேரியில் உள்ள அனைத்து அரசு துறைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. புதுச்சேரி மாநிலத்தில் பேரிடர் மீட்பு குழுவினர் தாழ்வான பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். புயலின் காரணமாக பலத்த காற்று வீசும் என்பதால் மாநிலத்தில் பேனர்கள், கட் -அவுட்டுகள், பிளக்ஸ், விளம்பர பலகைகள் வைக்க ஆட்சியர் வல்லவன் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இதை அடுத்து நள்ளிரவு முதல் புதுச்சேரியில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள், கட்- அவுட்டுகள் , ஃபிளக்ஸ்கள் அகற்றப்பட்டு வருகின்றன. புயலினால் வேகமாக வீசும் காற்றினால் கட் – அவுட்டுகள், பேனர்கள், பிளக்ஸ் விழுந்து உயிர் பலி ஏற்படுவது தவிர்க்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.