காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா இளநகர் கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி (வயது 23). இவர், JCB ஆப்ரேட்டராக வேலை பார்த்து வருகிறார். செய்யாறு பகுதியை சேர்ந்த பட்டதாரி இளம்பெண் ஒருவர், ஒரகடம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இருவருமே ஒரே நிறுவனத்தில் பணியாற்றியதாக கூறப்படுகிறது. முதலில் இருவரும் நண்பர்களாக பழகிய நிலையில், நாளடைவில் காதலாக மாறியுள்ளது.
கடந்த ஒரு வருடமாக இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். அப்போது, ஒன்றாக செல்பி எடுத்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில், பாலாஜிக்கு வேறொரு பெண்ணுடன் திருமணமாகியுள்ளது. இதனால், அவருடன் பேசுவதை அந்த பெண் நிறுத்தியுள்ளார். அதே நேரத்தில், அந்த இளம்பெண்ணுக்கு கடந்த 6ஆம் தேதி வேறொரு இளைஞருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
இதை தெரிந்து கொண்ட பாலாஜி, தனது முன்னாள் காதலியின் வருங்கால கணவர் வீட்டிற்கு சென்று ஏற்கனவே தன்னுடன் அந்த பெண் செல்போனில் எடுத்துக்கொண்ட போட்டோவை காட்டி தாங்கள் இருவரும் காதலித்து வந்ததாக கூறி திருமணத்தை நிறுத்தி விட்டதாக சொல்லப்படுகிறது. அத்துடன் அந்த பெண்ணை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட பாலாஜி, தன்னிடம் மீண்டும் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார்.
நீ யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள். ஆனால், தனது ஆசைக்கு இணங்க வேண்டும் என மிரட்டியுள்ளார் பாலாஜி. மேலும், இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதையடுத்து, பாலாஜியின் தொல்லை தாங்க முடியாததால், அந்த இளம்பெண் செய்யாறு அனைத்து காவல்நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார், பாலாஜியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.