நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், கலந்தாய்வு நடைபெறும் நாளிலேயே கல்விக் கட்டணம் செலுத்தப்பட வேண்டும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் புதிய நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது.
இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிப்பில், ”மருத்துவக் கல்லூரிகளில் MBBS, BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான NEET – UG தேர்வு நடைபெற்று, முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் உள்ள 35 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 5,050 இடங்களில் 15% அகில இந்திய ஒதுக்கீடுக்கு 757 இடங்கள் ஒதுக்கப்பட்ட பின், எஞ்சிய 4,293 இடங்களுக்கும், இதர தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கும்
மருத்துவக் கல்வி இயக்குநரகம் கலந்தாய்வை நடத்த உள்ளது.
மருத்துவக் கலந்தாய்வுக்கான அறிவிப்பாணை ஓரிரு நாளில் வெளியாகும். மாணவர்கள் அடுத்த வாரம் முதல் கலந்தாய்வில் பங்கேற்க விண்ணப்பிக்கலாம். முதலில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நடைபெற்ற பின், மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு தொடங்கும். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு ஆன்லைனில் நடைபெறும். மாநில ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு சென்னையில் நேரடியாக நடைபெறும். இந்நிலையில், நடப்பு ஆண்டில் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்படுகிறது.
மருத்துவக் கலந்தாய்வின்போதே, இடங்கள் ஒதுக்கப்பட்ட பின் மாணவர்கள் தேர்வுக்குழுவிடம்
ஓராண்டுக்கான கல்விக் கட்டணத்தை செலுத்திட வேண்டும். இதன்மூலம் கலந்தாய்வு முடிந்து மாணவர்கள் கல்லூரிகளுக்கு நேரில் செல்லும்போது கூடுதல் கட்டணம் வசூலிப்பதோ, சேர்க்கையை மறுப்பதோ முற்றிலும் தடுக்கப்படும். மாணவர்கள் செலுத்திய கல்விக் கட்டணத்தை சம்மந்தப்பட்ட கல்லூரிகளுக்கு தேர்வுக் குழுவே பின்னர் விடுவிக்கும்”. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நடப்பு ஆண்டுக்கான கல்விக் கட்டண விவரங்களை விரைவில் கட்டண நிர்ணயக் குழு
வெளியிடும். தனியார் மருத்துவக் கல்லூரிகள் 50% இடங்களுக்கு அரசு நிர்ணயித்துள்ள கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.