இன்றைய காலகட்டங்களில் மருத்துவ செலவுகள் பெரும்பாலானவர்களுக்கு இக்கட்டான சூழ்நிலையை உருவாக்குகிறது. நாட்டில் மருத்துவ வசதிகள் பெருமளவு அதிகரித்து இருந்தாலும் அவற்றுக்கான கட்டணமும் அதிகமாக இருப்பதால் இந்த சேவைகளை பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் ஒரு ரூபாய் கூட பணம் செலுத்தாமல் இந்தியா முழுவதிலும் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற முடியும் என்ற புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.
மெடிக்கல் இன்சூரன்ஸ் விதிகளில் செய்யப்பட்டுள்ள சில மாற்றங்களால் ஜனவரி 25ஆம் தேதியிலிருந்து மருத்துவமனைகளில் ஒரு ரூபாய் முன் பணம் இல்லாமல் சிகிச்சை பெறலாம் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த விதி காப்பீடு செய்தவர்களுக்கு பொருந்தும். எந்த நிறுவனத்தில் காப்பீடு செய்து இருந்தாலும் நாட்டில் உள்ள எந்த மருத்துவமனையிலும் முன்பணம் இல்லாமல் சிகிச்சை பெறுவதற்கும் இன்சூரன்ஸ் செய்தவர்களுக்கு 100% இலவச சிகிச்சை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு பரிந்துரை செய்திருந்தது.
இந்தக் கோரிக்கையை பரிசீலனை செய்து உடனடியாக ஏற்றுக் கொண்ட இன்சூரன்ஸ் நிறுவனங்கள் புதிய விதிகள் ஜனவரி 25ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என அறிவித்திருக்கிறது. இதன் மூலம் மருத்துவ காப்பீடு செய்தவர்கள் இந்தியாவில் உள்ள எந்த மருத்துவமனைக்கும் சென்று ஒரு ரூபாய் செலவில்லாமல் சிகிச்சை பெற்றுக் கொள்ள இந்த புதிய விதிமுறை வழி செய்து இருக்கிறது . மேலும் முன்பிருந்த இன்சூரன்ஸ் விதிமுறைகளில் காப்பீடு செய்துள்ள நிறுவனத்துடன் ஒப்பந்தத்தில் இருக்கும் மருத்துவமனைகளில் மட்டுமே பணம் இல்லாமல் சிகிச்சையை பெற முடியும். மேலும் ஒப்பந்தத்தில் இல்லாத மருத்துவமனைகளில் சிகிச்சை எடுக்க நேர்ந்தால் அந்த மருத்துவமனைக்கு சேர வேண்டிய கட்டணத்தை செலுத்தி விட்டு நாம் இன்சூரன்ஸ் செய்துள்ள நிறுவனத்தில் இருந்து நமக்கான கிளைம் தொகையை பெற முடியும்.
ஆனால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் விதியின்படி நாம் இன்சூரன்ஸ் செய்துள்ள நிறுவனத்தின் நெட்வொர்க்கில் இல்லாத மருத்துவமனைகளில் கூட கட்டணமில்லா சிகிச்சியை பெறலாம். எனினும் இதற்கு என்று சில வரம்புகள் இருக்கிறது. இந்த புதிய விதிமுறையிலும் நாம் எடுத்திருக்கும் இன்சூரன்ஸ் பாலிசி பிரீமியத்தின் அடிப்படையில் நமக்கான பாலிசி தொகையை மட்டுமே மருத்துவமனைக்கு வழங்கும். அதற்கு மேல் வருகின்ற செலவை பாலிசிதாரர் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் நாம் இன்சூரன்ஸ் எடுத்துள்ள நிறுவனத்தின் நெட்வொர்க்கில் இல்லாத மருத்துவமனைகளில் சிகிச்சை எடுக்க நேர்ந்தால் 48 மணி நேரங்களுக்கு முன்பாக நமது இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து குறித்த மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி பெற்று இருக்க வேண்டும். விபத்து மற்றும் அவசர சிகிச்சையின் போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து 48 மணி நேரத்திற்குள் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் ஒப்புதல் பெற வேண்டும்.