ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பல பகுதிகள் கடும் பனிப்பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறது. பனிப்பொழிவின் காரணமாக மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கின்றனர். கடும் பனிப்பொழிவால் ஆபத்தான சில சாலைகளும் ராணுவத்தால் மூடப்பட்டிருக்கிறது.
இதனால் மருத்துவமனை செல்வது போன்ற அவசர தேவைகளுக்கும் மக்கள் கடும் சவாலை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இந்நிலையில் குப்வாடா மாவட்டத்தைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியாமல் அவரது குடும்பத்தினர் தவித்தனர் . பனிப்பொழிவு காரணமாக மருத்துவமனை நிர்வாகமும் உதவிகள் செய்ய முன்வரவில்லை. இந்நிலையில் இந்திய ராணுவத்தினர் அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற சம்பவம் மனதை நெகிழ வைத்து இருக்கிறது.
கடும் பனிப்பொழிவு காரணமாக சாலைகளில் இரண்டு முதல் மூன்று அடி உயரத்திற்கு பனிக்கட்டிகள் உறைந்திருப்பதால் வாகன போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் எட்டு கிலோமீட்டர் தூரத்திற்கு மூன்று அடி படர்ந்திருந்த பனிக்கட்டிகளின் நடுவே ஸ்ட்ரெச்சர்ரில் வைத்து தூக்கிச் சென்று அந்தப் பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அடர்ந்த இருளில் தங்களது உயிரையும் பொருட்படுத்தாது ராணுவ வீரர்கள் மேற்கொண்ட இந்த மனிதாபிமான பணி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறது.