எவ்வளவு பெரிய அரசியல்வாதியாக இருந்தாலும் சரி, அல்லது எவ்வளவு நேர்மையான தலைவராக இருந்தாலும் சரி அரசியலுக்குள் நுழைந்து விட்டால் யாராலும் எந்த தவறும் செய்யாமல் இருக்க முடியாது. எல்லோரும் நிச்சயமாக ஏதாவது ஒரு தவறை செய்தே தீருவார்கள். இதற்கு முன்னாள் முதல்வர்கள் பிரதமர்கள் என்று பல உதாரணம் இருக்கின்றது.
மறைந்த முன்னாள் சட்டசபை உறுப்பினரும், அமைச்சர் கீதா ஜீவனின் தந்தையுமான என் பெரியசாமியின் மீது 2003 ஆம் ஆண்டு அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் சொத்து குவிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அந்த வழக்கில் கடந்த 1996 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரையில் திமுகவின் ஆட்சிக்காலத்தின்போது தூத்துக்குடி சட்டசபை உறுப்பினராக இருந்த என் பெரியசாமி வருமானத்திற்கு அதிகமாக 2 கோடியை 31 லட்சம் ரூபாய் சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும் அந்த சமயத்தில் பஞ்சாயத்து தலைவராக பணியாற்றி வந்த கீதாஜீவன் உட்பட அவருடைய குடும்பத்தைச் சார்ந்தவர்கள் 8 பேர் மீதும் இந்த சொத்து குவிப்பு வழக்கு பதிவானது.
இந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தூத்துக்குடி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. கீதா ஜீவனின் தந்தை உயிரிழந்துவிட்ட நிலையில், மீதம் இருக்கின்ற 5 பேர் இன்று நீதிமன்றத்தின் முன் ஆஜரானார்கள். இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி குருமூர்த்தி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தெரிவிக்கப்படுவது நிரூபணமாகவில்லை என்று தெரிவித்து 5 பேரும் விடுதலை செய்யப்படுவதாக தெரிவித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து நீதிமன்ற வளாகத்திலிருந்து வெளியே வந்த அமைச்சர் கீதா ஜீவன் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது நீதி கிடைத்து விட்டதாகவும், நியாயம் வென்றுள்ளதாகவும் அவர் கூறினார்.