fbpx

அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய அமைச்சர் பொன்முடி..!! செம்மண் குவாரி வழக்கு இன்று மீண்டும் விசாரணை..!!

விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் மீதான செம்மண் குவாரி வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

தமிழ்நாட்டில் கடந்த 2006 – 2011 வரை திமுக ஆட்சியில் இருந்தது. அப்போது, உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிதான் கூடுதலாக கனிம வளத்துறையையும் கவனித்து வந்தார். பொன்முடி கனிம வளத்துறையில் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டம், பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன், பொன்.கௌதமசிகாமணி எம்.பி., உள்ளிட்ட 8 பேர் மீது விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார், 2012இல் ஆண்டில் வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்கிடையே, குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் ஒருவரான லோகநாதன் இறந்து விட்டார். இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகளாக 67 பேர் சேர்க்கப்பட்டு, செப்டம்பர் 7ஆம் தேதி வரை 11 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் 9 பேர் பிறழ் சாட்சியமளித்தனர்.

கடந்த மாதம் நடந்த வழக்கு விசாரணையின் போது பொன்முடி, பொன்.கெளதம சிகாமணி தவிர, மற்ற 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அரசுத் தரப்பு சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை. அமைச்சர், எம்.பி. ஆகியோர் ஆஜராகாத காரணத்தை குறிப்பிட்டு திமுக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகள் பிறழ் சாட்சியமாக மாறி வருவதால், வழக்கு விசாரணைக்கு உதவும் வகையில் தன்னையும் அனுமதிக்கக் கோரி முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி மனுதாக்கல் செய்தார்.

இதைத்தொடர்ந்து, நடைபெற்ற விசாரணையை அடுத்து அக்டோபர் 3ஆம் தேதி அவரது மனு ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை அக்டோபர் முதல் வாரம் நடந்தது. அப்போது, பொன்முடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ஜெயக்குமார் தாக்கல் செய்த மனுவுக்கு ஆட்சேபணை தெரிவித்ததுடன், மனுதாக்கல் செய்வதற்கு கால அவகாசம் வழங்குமாறு கோரிக்கை வைத்தார்கள்.

இதனை ஏற்ற முதன்மை மாவட்ட நீதிபதி ஆா்.பூர்ணிமா, வழக்கின் விசாரணையை அக்டோபர் 17ஆம் தேதியான இன்றைக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிட்டார். அதன்படி, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. டி.ஜெயக்குமாா் தாக்கல் செய்த மனுவுக்கு பதில் மனுவினை பொன்முடி தரப்பு இன்று அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

பிக்பாஸ் வீட்டில் கேமராவை பார்த்து ஜோவிகா சொன்ன அந்த வார்த்தை..!! உடைந்து போன வனிதா விஜயகுமார்..!!

Tue Oct 17 , 2023
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஒரே வீட்டில் வித்தியாசமான மனநிலைகளை கொண்ட மனிதர்கள் எந்தவிதமான தொழில்நுட்ப வசதிகளும் இல்லாமல் சக மனிதர்களுடன் நடந்துக் கொள்ளும் விதம் இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்படுகின்றன. தற்போது 7-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், இதுவரை நிகழ்ச்சியிலிருந்து இரண்டு போட்டியாளர்கள் வெளியேறியுள்ளனர். இதனால் அடுத்து யார் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாக […]

You May Like