தமிழகம் முழுவதும் மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டம் தொடங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, தமிழகம் முழுவதும் உள்ள மாநகராட்சி நகராட்சி, மின் வாரிய அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு இடங்களில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வசதி கொண்ட சார்ஜிங் பாயிண்ட் அமைப்பதற்கு இடங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 100 இடங்களில் பார்க்கிங் உள்ளிட்ட நவீன வசதியுடன் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் உள்ள விவசாயிகளுக்கு ஏற்கனவே ஒரு லட்சம் இலவசம் மின்சார இணைப்பு வசதி கொடுக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 50,000 விவசாயிகளுக்கு 100 நாட்களுக்குள் இலவச மின்சார இணைப்பு வழங்கும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த உள்ளதாக கூறினார். இந்த திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் விரைவில் தொடங்கி வைப்பார் எனவும் தெரிவித்தார்.