பெரியார் பற்றி பேசியதால் நாம் தமிழர் கட்சி சீமானின் அரசியல் சரியத் தொடங்கியுள்ளது என அமைச்சர் சிவசங்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் திருமகன் ஈவெரா மறைவுக்கு பிறகு 2023-ல், ஈரோடு கிழக்கில் நடந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாதக போன்ற கட்சிகளின் வேட்பாளர்கள் களம் கண்டனர். இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் 10 ஆயிரத்து 827 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பெற்றார். இத்தேர்தலில் மொத்தம் பதிவான வாக்குகளில் நாதக 6.35 சதவீத வாக்குகளைப் பெற்றது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாதக சார்பில் சீதாலட்சுமி போட்டியிட்டார். இந்த தேர்தலில் திமுக – நாதக இடையே நேரடி போட்டி ஏற்பட்டது. பெரியார் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்த நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆளுங்கட்சியான திமுகவின் மீதும் குற்றச்சாட்டுகளை சுமத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். வாக்கு எண்ணிக்கை முடிவில் நாதக வேட்பாளர் சீதாலட்சுமி 24,151 வாக்குகள் பெற்றார். இம்முறை, நாதக 15.59 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது.
பெரியாரை தொட்டவன் கெட்டான் என அமைச்சர் சிவ சங்கர் சீமானுக்கு பதிலடி கொடுத்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்; பெரியார் பற்றி பேசியதால் நாம் தமிழர் கட்சி சீமானின் அரசியல் சரியத் தொடங்கியுள்ளது. பெரியாரை எதிர்த்துக்கொண்டு தமிழகத்தில் யாராலும் அரசியல் செய்ய முடியாது. சீமானின் பொய்யை இனி அவரது கட்சியில் உள்ளவர்களே நம்ப மாட்டார்கள். வரும் 2026 தேர்தலில் திமுக வேண்டும் ஆட்சி கட்டிலில் அமரும் என்றார்.