Election 2024: நடைபெற இருக்கும் லோக்சபா(Loksabha) தேர்தல் பிரச்சாரங்களின் போது தீவிரவாதிகள் சதி வேலையில் ஈடுபடலாம் என மத்திய உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளை எச்சரித்திருக்கிறது.
2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல்(Loksabha) வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1-ஆம் தேதி முடிவடைய இருக்கிறது.7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடத்தப்பட்டு ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. மேலும் பொது தேர்தலை பாதுகாப்பாகவும் நியாயமாகவும் நடத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களிலும் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தமிழ் நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒவ்வொரு கிராமம் நகரம் என அனைத்து பகுதிகளிலும் அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். மாநிலம் முழுவதும் தேர்தல் திருவிழா கலை கட்டி வருகிறது.
இந்நிலையில் தமிழகம் உள்ளிட்ட பல பகுதிகளில் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களின் போது குண்டு வெடிப்பு போன்ற நாச வேலைகளுக்கு தீவிரவாத இயக்கங்கள் திட்டம் தீட்டி இருப்பதாக தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களையும் உள்துறை அமைச்சகம் எச்சரித்து இருக்கிறது.
இது தொடர்பாக மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் எழுதியுள்ள கடிதத்தில் தேர்தல்(Election) நேரத்தில் தீவிரவாதிகள் சதி வேலையில் ஈடுபடலாம் என தகவல் கிடைத்துள்ளதாக மாநில அரசுகளை மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.