சென்னையில் பிஸ்கட் பாக்கெட்டில் ஒரு பிஸ்கட் குறைவாக இருந்ததால், வாடிக்கையாளருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை எம்எம்டிஏ மாத்தூர் பகுதியைச் சேர்ந்த தில்லிபாபு என்பவர் தெருநாய்களுக்கு உணவளிக்க கடந்த 2021ஆம் ஆண்டு சில்லரை விற்பனை கடையில் ஐடிசி நிறுவனம் தயாரிக்கும் ‘சன்ஃபீஸ்ட் மேரி லைட்’ பிஸ்கட் 2 பாக்கெட்டுகள் வாங்கியுள்ளார். அந்த பிஸ்கட் பாக்கெட்டில் 16 பிஸ்கட்டுகளுக்கு பதில் 15 மட்டுமே இருந்துள்ளது. இதுகுறித்து சில்லரைக் கடைக்காரரிடமும், ஐடிசி நிறுவனத்திடமும் தில்லிபாபு முறையிட்டுள்ளார். ஆனால், அவர்களிடம் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை.
இதனால், நுகர்வோர் நீதிமன்றத்தில் தில்லிபாபு மனுதாக்கல் செய்தார். அந்த மனுவில், ஒரு பிஸ்கட்டின் விலை 75 பைசா என்றும், நாளொன்றுக்கு 50 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகளை தயாரிக்கும் ஐடிசி நிறுவனம் ரூ. 29 லட்சம் ஊழல் செய்வதாக தெரிவித்தார். இந்த வழக்கில் வாதாடிய ஐடிசி நிறுவனம், பிஸ்கட் பாக்கெட்டுகள் எடையை வைத்துதான் கணக்கிடப்படுகிறது. எண்ணிக்கையை வைத்து அல்ல என்று விளக்கம் அளித்தனர்.
ஆனால், குறிப்பிட்ட பிஸ்கட் பாக்கெட்டின் எடையை நீதிமன்றம் ஆராய்ந்ததில், 76 கிராமுக்கு பதிலாக 74 கிராம் மட்டுமே இருந்தது. எனவே, இந்த வழக்கு தொடர்ந்த மனுதாரர் தில்லிபாபுவுக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும், குறிப்பிட்ட நாளில் தயாரிக்கப்பட்ட பிஸ்கெட்டுகளின் விற்பனையை நிறுத்தவும் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.