ஒரு நாடு, ஒரு தர்மம், ஒரு மொழி என்று சொல்லும் மன்னருக்கு இரண்டு நாக்கு. இது நாம் எல்லாரும் தலை குனிய வேண்டிய அசிங்கமான விஷயம் என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறியுள்ளார்.
இரண்டாம் கட்ட நாடாளுமன்றத் தேர்தலுக்காக பிரதமர் நரேந்திர மோடி சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பிரச்சாரத்தின் போது காங்கிரஸ் குறித்த பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கிறார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி கொடுத்த நடிகர் பிரகாஷ் ராஜ் பிரதமரின் பேச்சுக்கு கடுமையான கண்டனம் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது, “மல்லிப்பூவுக்குள் இருக்கும் மணம் தானே வெளியே வரும்? மன்னருடைய அசிங்கம் அவருடைய பேச்சில் இருந்து வெளியே வருகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் எல்லா ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பேசிய பேச்சை, முஸ்லிம் இனத்தைக் குறிப்பிட்டு மோடி பேசுகிறார். இதிலேயே அவரது குறிக்கோள் தெரிகிறது.
தமிழ்நாட்டில் இருக்கும்போது இந்த வார்த்தையை அவர் பேச மாட்டார். கர்நாடகாவில் பேச மாட்டார். அந்தப் பருப்பு இங்கே வேகாது, ஆனால் உ.பியில் வேகும். ஒரு நாளைக்கு 5 வேடங்கள், ஒரு நாடு, ஒரு தர்மம், ஒரு மொழி என்று சொல்லும் மன்னருக்கு இரண்டு நாக்கு. இது நாம் எல்லாரும் தலை குனிய வேண்டிய அசிங்கமான விஷயம். மக்கள் தான் இதற்கு பதில் சொல்ல வேண்டும்” என விமர்சித்துள்ளார்
மேலும், “ திருடனைப் பற்றி இன்னொரு திருடனிடம் எப்படி புகார் தர முடியும்? தேர்தல் ஆணையத்துக்கு யாராவது புகார் தர வேண்டுமா? ராமரை வைத்து பிரச்சாரம் செய்கிறார்கள். சாதியை வைத்து அரசியல் செய்கிறார்கள். இவர்கள் மறுபடி இந்த நாட்டில் ஆட்சிக்கு வந்தால் எதுவுமே நடக்காது. எவனும் இருக்கக்கூடாது, எதிர்க்கட்சி இருக்கக்கூடாது. யாரும் கேள்வி கேட்கக்கூடாது.
மக்கள் கூட அவ்வப்போது அறியாமையில் ஓட்டு போடுவார்கள். கர்நாடகாதான் இந்த முறை மாநிலத்தில் அவர்களை ஆட்சியில் இருந்து கீழே இறக்கியது. கடைசியில் தேர்தலில் ஜெயிப்பதும் தோற்பதும் மக்கள்தான். அவர்களுடைய வாழ்க்கைதான். தென் இந்தியா நிச்சயம் இந்த முறை, பாஜகவுக்கும், இந்த மன்னருக்கும் என்ன சொல்ல வேண்டுமோ? அதை சொல்லும்” எனத் தெரிவித்தார்.