‘மோலேசா’ என்பது பர்மா நாட்டின் ஸ்பெஷல் குளிர்பானம் ஆகும். இந்த குளிர்பானம் அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது. அதிலும் சென்னை எண்ணூர் அருகே உள்ள பர்மா நகரில் ரொம்பவே ஸ்பெஷல்.
கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் நம் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டியுள்ளது. அதிலும் ஆரோக்கியமான உணவு வகைகளையும், குளிர்பானங்களையும் குடிப்பது மிக மிக அவசியம். அப்படி ரொம்பவே ஹெல்தியான வீட்டிலேயே ஈசியாக செய்யக்கூடிய பானம்தான் இந்த மோலேசா. இதை எப்படி தயார் செய்வது என்பது குறித்து பார்க்கலாம்..!
‘மோலேசா’ குளிர்பானம் செய்ய தேவையான பொருட்கள்: பச்சரிசி-1/2 கப், துருவிய தேங்காய்-1/2 கப், பாதாம் பிசின்-1கப், வெல்லம்-1 கப், ஐஸ்கட்டி- தேவையான அளவு, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: 1/2 கப் பச்சரியை எடுத்து 4 மணி நேரம் ஊறவைத்து பிறகு அதை மிக்ஸில் போட்டு நன்றாக அரைக்க வேண்டும். பிறகு துருவிய தேங்காய் ½ கப்பை மிக்ஸியில் போட்டு அரைத்து தேங்காய் பாலை எடுத்து வைத்து கொள்ள வேண்டும். பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 2 கப் தண்ணீர் சேர்த்து கூடவே கொஞ்சம் உப்பும் சேர்த்து கொதிக்க விட வேண்டும். தண்ணீர் கொதித்ததும் அடுப்பை சிம்மில் வைத்து விட்டு, நாம் ஏற்கெனவே அரைத்து வைத்துள்ள பச்சரிசி மாவை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கலக்கி விட்டுக்கொண்டே வேக வைக்க வேண்டும். தொடர்ந்து கலக்கி விட வேண்டும் .
இப்படியே கலக்கி 15 நிமிடம் வரை வேக வைக்க வேண்டும். இப்போது அரிசி மாவு நன்றாக வெந்து கட்டியாகி விடும். இப்போது ஒரு பாத்திரத்தில் குளிர்ந்த நீரை எடுத்து அதன் மீது ஜல்லி கரண்டியில் மாவை சிறிது சிறிதாக வைத்து அழுத்தி விடவும். சேமியா போல நீட்டு நீட்டாக மாவு கிடைக்கும். அதற்கு பெயர் ரைஸ் டிராப்ஸ். இப்படியே எல்லா மாவையும் பிழிந்து ரைஸ் டிராப்ஸ் செய்து வைத்துக் கொள்ளவும். இப்போது அந்த ரைஸ் டிராப்ஸை வேறு ஒரு பாத்திரத்தில் மாற்றி வைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் பாத்திரம் வைத்து அதில் 1 கப் வெல்லத்திற்கு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். வெல்லம் கொதி வந்ததும் வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும். பாதாம் பிசினில் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊற வைத்து தண்ணீரை வடிகட்டி எடுத்து வைத்து கொள்ள வேண்டும். இப்போது ஒரு கண்ணாடி கிளாசை எடுத்துத்து, அதில் பாதாம் பிசின் 2 தேக்கரண்டி சேர்க்கவும், சேமியா போன்று செய்து வைத்திருக்கும் ரைஸ் டிராப்ஸை 2 தேக்கரண்டி சேர்க்கவும், பிறகு 2 கரண்டி தேங்காய் பால் சேர்க்கவும். அத்துடன் வெல்லம் தண்ணீர் 2 கரண்டி சேர்த்து நன்றாக கலக்கி விட்ட பிறகு, ஐஸ் கட்டிகளை சேர்த்தால் நமக்கு சுவையான ஆரோக்கியமான மோலேசா பானம் ரெடியாகிவிடும்.
Read More: 2 மணிநேரத்தில் 1 மில்லியன் பார்வையாளர்களை கடந்த தலைவர் 171 டைட்டில்