வேலையில்லாத இளைஞர்களுக்கு அடுத்த நிதியாண்டு முதல் மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படும் என்று சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் அறிவித்துள்ளார்.
சத்தீஸ்கார் மாவட்டத்தின் ஜக்தல்பூரில் உள்ள லால்பக் பரேட் மைதானத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு அம்மாநில முதலமைச்சர் பூபேஷ் பாகல் உரையாற்றினார்.. அப்போது மாநிலத்தில் குடிசைத் தொழிலை வலுப்படுத்தும் வகையில் கிராமப்புற தொழில் கொள்கையை உருவாக்க உள்ளதாக அறிவித்தார். தொழில் துறையால் உருவாக்கப்பட்ட தொழில்துறை பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளுக்கு சொத்து வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும் முதல்வர் கூறினார்.

ராய்ப்பூர் விமான நிலையம் அருகே ஏரோசிட்டி அமைப்பது, தொழிலாளர்களுக்கு வீட்டு வசதித் திட்டம் உள்ளிட்ட பல அறிவிப்புகளையும் அவர் அறிவித்தார். மேலும் “ வேலையற்ற இளைஞர்களுக்கு அடுத்த நிதியாண்டு (2023-24) முதல் ஒவ்வொரு மாதமும் வேலையின்மை உதவித்தொகை வழங்கப்படும். ராய்ப்பூரில் உள்ள சுவாமி விவேகானந்தர் விமான நிலையம் அருகே பயணிகள் வசதியை மேம்படுத்தவும், விமான நிலையப் பகுதியின் வர்த்தக வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் ஏரோசிட்டி உருவாக்கப்படும். சத்தீஸ்கர் கட்டிடம் மற்றும் இதர கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளர்களுக்கு வீடு கட்ட ரூ.50,000 மானியமாக வழங்கப்படும் என்றார்.
குடிசைத் தொழில் சார்ந்த கிராமப்புறப் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும், கிராமப்புறங்களில் உள்ள மக்களின் வருமானத்தை அதிகரிக்கவும், மாநிலத்தில் கிராமப்புற தொழில் கொள்கை அரசால் வகுக்கப்படும். பெண் தொழில்முனைவோர், பெண்கள் தொழிலதிபர்கள் ஆகியோரை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டம் கொண்டு வரப்படும்..
பழங்குடியினரின் கலாச்சாரம் மற்றும் பண்டிகைகளைப் பாதுகாப்பதில் மாநில அரசு உறுதியாக இருக்கிறது.. அடுத்த நிதியாண்டு முதல் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் பஸ்தர் மற்றும் சுர்குஜா பிரிவுகள் மற்றும் பட்டியலிடப்பட்ட பகுதிகளில் பழங்குடியின சமூகத்தினரின் திருவிழாக்களை நடத்துவதற்காக ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துக்கும் ஒவ்வொரு ஆண்டும் ரூ.10,000 உதவி வழங்கப்படும். சத்தீஸ்கர் மாநிலத்தின் வளர்ச்சிக்கான புதுமைகளை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் மாநில கண்டுபிடிப்பு ஆணையம் அமைக்கப்படும்..” என்று தெரிவித்தார்..
சத்தீஸ்கரில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.. கடந்த 2018-ம் ஆண்டு அங்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதால், 15 ஆண்டுகளுக்குப் பிறகு அங்கு காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியை பிடித்தது.. இந்த ஆண்டு இறுதியில் சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மக்களை ஈர்க்கும் வகையில் அம்மாநில முதல்வர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..