நரபலி கொடுத்த உடல் பாகங்களை விற்பனை செய்தால் நல்ல பணம் கிடைக்கும் என நினைத்து 2 நாட்களாக ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கேரள மாநிலத்தில் 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட வழக்கில் எர்ணாகுளத்தைச் சேர்ந்த முகமது ஷாஃபி, பத்தனம்திட்டா இலந்தூரைச் சேர்ந்த பாரம்பரிய வைத்தியர் பகவல்சிங், அவரின் மனைவி லைலா ஆகியோர் கைது செய்யப்பட்டு, தற்போது போலீஸ் காவலில் உள்ளனர். இரட்டை நரபலி நடந்த பகவல் சிங்கின் வீட்டிற்கு மூவரையும் அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது பகவல் சிங் வீட்டிலும், ஃப்ரிட்ஜிலும் ரத்தக்கறைகள் இருந்தது கண்டறியப்பட்டன. மனித இறைச்சி சமைத்த பாத்திரங்களும், உடலை வெட்ட பயன்படுத்திய 3 கத்திகள், ஒரு வெட்டுகத்தி, மரக்கட்டை ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
மேலும் பெண் உருவம் போன்ற டம்மி உடல் ஒன்றை பகவல் சிங்கின் வீட்டுக்கு கொண்டு சென்று நரபலி கொடுத்தது எப்படி என்பதை லைவாக செய்ய வைத்து மூவரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. ஃப்ரிட்ஜில் ரத்தம் எப்படி வந்தது என லைலாவிடம் கேட்டதற்கு, நரபலி கொடுத்ததில் சுமார் 10 கிலோ இறைச்சியை ஃபிரிட்ஜில் 2 நாட்களாக வைத்திருந்தாக அவர் கூறியுள்ளார். சமைத்த மனித இறைச்சியை சாப்பிட பகவல் சிங் மறுத்திருக்கிறார். இதனால், லைலா அவரது வாயில் இறைச்சியை திணித்துள்ளார். ஆனால், பகவல்சிங் இறைச்சியை துப்பிவிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், முகமது ஷாஃபியிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஷாஃபி தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, ”ஸ்ரீதேவி என்ற போலி ஃபேஸ்புக் ஐ.டி. மூலம் பகவல் சிங்கிடம் பெண் போன்று பழகியுள்ளார் ஷாஃபி. அது பெண்தானா என்பதை கண்டறிய மெசேஞ்சரில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும்படி பகவல் சிங் கூறியுள்ளார். கிரிமினலாக யோசித்த ஷாஃபி, எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை பேச வைத்து சில வாய்ஸ் மெசேஜ்களை அனுப்பியுள்ளார். முதலில் செல்வம் பெருக சாதாரண பூஜைகளை செய்துள்ளார் முஹம்மது ஷாஃபி. அப்போது சிறிது சிறிதாக பகவல்சிங் தம்பதியிடம் இருந்து ரூ.6 லட்சம் வரை ஷாஃபி வாங்கியுள்ளார். அந்த பணத்தை திரும்ப கேட்டபோது, இவர்களை கொலை வழக்கில் சேர்த்துக்கொண்டால் ஏற்கனவே வாங்கிய பணத்தை கேட்கமாட்டார்கள், மிரட்டி கூடுதல் பணம் பறிக்கலாம் என ஷாஃபி திட்டமிட்டிருக்கிறார்.
அதற்காகத்தான் நரபலி பூஜை என்ற ஐடியாவை சொல்லியிருக்கிறார். நரபலி கொடுத்தால் பலன் கிடைக்குமா என ஸ்ரீதேவி ஃபேஸ்புக் ஐ.டி-யிடம் சந்தேகம் கேட்டுள்ளார். நான் அப்படி பூஜை செய்து பலன் கிடைத்தது என ஸ்ரீதேவி ஐடி-யில் இருந்து பதில் வந்துள்ளது. அதை நம்பி நரபலிக்கு தயாராகியுள்ளார் பகவல் சிங். இரண்டாவது நரபலி கொடுத்த சமயத்தில் மனித இறைச்சி விற்றால் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் எனவும் மார்பகம், இதயம், ஈரல் என ஒவ்வொரு உறுப்புகளின் இறைச்சிக்கும் தனித்தனி விலை வைத்து விற்பனை செய்யலாம் எனவும் ஷாஃபி கூறியுள்ளார். மேலும், மனித இறைச்சி வாங்க பெங்களூருவில் இருந்து ஒரு வியாபாரி வருவதாக ஷாஃபி கூறியுள்ளர். அதற்காக இறைச்சியை ஃபிரிட்ஜில் பாதுகாப்பாக வைத்துள்ளனர். ஷாஃபி சொன்னபடி யாரும் வராததால் இறைச்சியை குழிதோண்டி புதைத்துள்ளனர். ஷாஃபி சொன்னதை எல்லாம் தம்பதியினர் நம்பியதன் பின்னணி குறித்தும் மேலும் விசாரணை நடத்தவேண்டியது உள்ளது” என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.