Trump: டொனால்ட் டிரம்ப் அதிபராகப் பொறுப்பேற்ற ஒரே மாதத்தில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 20,000க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் 47வது அதிபராக, குடியரசு கட்சியின் டொனால்டு டிரம்ப் சமீபத்தில் பதவியேற்றார்; தொடர்ந்து அதிரடியான பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். சட்ட விரோதமாக குடியேறியவர்களை கைது செய்து நாடு கடத்த உத்தரவிட்டார். இதன் படி பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்து விமானப்படை விமானம் மூலம் அனுப்பி வைத்தனர்.
இதில், அமெரிக்க விமானம் தரையிறங்குவதற்கு மெக்சிகோ அனுமதி மறுத்தது. அதேபோல், அகதிகள் அனுப்பி வைக்கப்பட்ட விமானங்களை தரையிறங்க கொலம்பியாவும் அனுமதிக்கவில்லை. இதற்கு பழிவாங்கல் நடவடிக்கையாக, அந்த நாட்டு பொருட்களுக்கு 25 சதவீதம் இறக்குமதி வரி விதிக்க அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் உயர்த்தினார். இந்த வரி விதிப்பு, ஒரு வாரத்தில் 50 சதவீதமாக உயர்த்தப்படும்; கொலம்பியா நாட்டு அதிகாரிகளுக்கான விசா ரத்து செய்யப்படுகிறது; கொலம்பியர்கள் அமெரிக்காவுக்கு பயணிக்க தடை விதிக்கப்படுகிறது என்றும் அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார்.
இந்தநிலையில், டொனால்ட் டிரம்ப் அதிபராகப் பொறுப்பேற்ற ஒரே மாதத்தில் அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய 20,000க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக CNN செய்திகள் வெளியிட்டுள்ளது. சமூகத்தில் செய்யப்படும் பெரிய அளவிலான கைதுகளின் வேகம் பைடன் நிர்வாகத்தை விட டிரம்ப் நிர்வாக நடவடிக்கை அதிகமாக உள்ளது. கடந்த நிதியாண்டில், பைடனின் கீழ், அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை சுமார் 33,000 பேரை கைது செய்ததாக CNN தெரிவித்துள்ளது.
இதுகுறித்து DHS செயலாளர் கிறிஸ்டி நோயம் கூறியதாவது, “எல்லையைப் பாதுகாக்கவும், சட்டவிரோத அந்நிய நாட்டவர்களை நாடு கடத்தவும் நாங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகளால், அதிபர் டிரம்பும் இந்த நிர்வாகமும் ஒவ்வொரு நாளும் உயிர்களைக் காப்பாற்றி வருகின்றனர். லட்சக்கணக்கான குற்றவாளிகள் இந்த நாட்டிற்குள் சட்டவிரோதமாக அனுமதிக்கப்பட்டனர். நாங்கள் அவர்களை வீட்டிற்கு அனுப்புகிறோம், அவர்கள் ஒருபோதும் திரும்பி வர அனுமதிக்கப்பட மாட்டோம் என்று தெரிவித்தார்.