நாடு முழுவதுமான நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த விவரங்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில் உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வில் 498 வழக்குகளும், தொழிலாளர்கள் தொடர்பான 1667 வழக்குகளும், 487 தேர்தல் வழக்குகளும், 2870 பொதுநல வழக்குகளும், 1295 நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளும் நிலுவையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் உச்சநீதிமன்றத்தில் 69,781 வழக்குகளும், உயர்நீதிமன்றங்களில் 53,51,284 வழக்குகளும், மாவட்ட மற்றும் சார்பு நீதிமன்றங்களில் 4,28,26,777 வழக்குகளும் நிலுவையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் 0.65 சதவிகிதம் நிலுவை வழக்குகள் குறைந்துள்ளதாகத் தெரிவித்துள்ள மத்திய அரசு, உயர்நீதிமன்றங்களில் 0.82 சதவிகிதமும், மாவட்ட மற்றும் சார்பு நீதிமன்றங்களில் 4.32 சதவிகிதமும் அதிகரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.