தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் குஷைகுடா பகுதி அடுக்குமாடி குடியிருப்பில் சதீஷ் – வேதா தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு நிஷிகேத் (9), நிஹால் (5) என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். விடுமுறை நாள் என்றாலும் பிற்பகலாகியும் இவர்களது வீட்டில் இருந்து யாரும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசர், கதவை உடைத்துசென்று பார்த்த போது, சதீஷ் உள்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் சடலமாக கிடந்தனர். இதையடுத்து, 4 உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த போலீசார், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியானது. சதீஷ்- வேதா தம்பதியின் இரண்டு மகன்களும மனநலம் குன்றியவர்கள். பிறந்தது முதல் மகன்கள் இரண்டு பேருக்கும் உடல் நிலையில் தீவிர பாதிப்புகள் இருந்து வந்துள்ளது. அவர்களுக்கு பல மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தும், எந்த பலனும் இல்லை. இதனால் சதீஷ், அவரது மனைவி வேதா மனஉளைச்சலில் இருந்துள்ளனர். இந்நிலையில், சம்பவத்தன்று தங்களது இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொன்று விட்டு, தம்பதியர் விஷம் குடித்து தற்கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.