மத்தியப்பிரதேச தலைநகர் போபாலில் விதிஷா என்ற பகுதியில் வசிக்கும் ஒரு பெண்ணுக்கு, சுகி செவானியா கிராமத்தில் வசிக்கும் இளைஞருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. பெண்ணின் கணவர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். திருமணமாகி சில மாதங்களிலேயே வரதட்சணை கேட்டு கணவர் சித்ரவதை செய்துள்ளார். தினமும் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு வந்தது. பலமுறை பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சேர்ந்து சமாதானம் செய்துவைத்தும் சண்டை தீரவில்லை.
தினமும் சண்டை சச்சரவுகளால் விரக்தியடைந்த அந்தப் பெண், கடந்த 15 நாட்களுக்கு முன்பு கணவர் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில், தனது மனைவியை காணவில்லை என கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மனைவி அவரது தாய் வீட்டில் இருப்பதை அறிந்த மாமியாரும், மைத்துனரும் அந்தப் பெண்ணிடம் சென்று சமாதானமாக பேசியுள்ளனர். கணவருடன் இனிமேல் சண்டை சச்சரவு ஏற்படாமல் இருக்கும் வகையில் தாங்கள் நடந்து கொள்வதாக மாமியார் கூறியுள்ளார். இதை நம்பி அந்தப் பெண்ணும் மாமியார் மற்றும் மைத்துனருடன் கணவன் வீட்டிற்கு சென்றுள்ளார்.
வீட்டிற்கு வந்தவுடன் கணவன், மாமியார், மைத்துனர் ஆகியோர் சேர்ந்து அப்பெண்ணை ஒரு நாள் முழுவதும் அறையில் அடைத்து வைத்ததாக கூறப்படுகிறது. மேலும், அவரை சித்ரவதை செய்ய அந்தப் பெண்ணை நிர்வாணப்படுத்தி சூடான இரும்பு கம்பியால் பெண்ணின் உடல் மற்றும் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்துள்ளார். பெண்ணில் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் கூடி அறையைத் திறந்து பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கணவர், மாமியார் மற்றும் மைத்துனர் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.