மும்பை குர்லா பகுதியைச் சேர்ந்த ரூபீ ஷேக் என்ற 34 வயது பெண் கடந்த மாதம் வீட்டில் அருகில் உள்ள உணவகம் ஒன்றில் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டிருக்கிறார். அப்போது எதிர்பாராத விதமாக பிரியாணியுடன் சிக்கன் எலும்பை முழுங்கியிருக்கிறார். அது அவரது தொண்டையில் சிக்கியுள்ளது. மருத்துவமனைக்கு செல்லாமல் இரண்டு நாட்கள் தொண்டையில் சிக்கிய எலும்பினால் உணவருந்த சிரமப்பட்டிருக்கிறார்.
இதனையடுத்து அவரது உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றிருக்கின்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது தொண்டையில் 3.2 செ.மீ அளவுள்ள இருப்பதைக் கண்டறிந்திருக்கின்றனர். அந்த எலும்பு அவரது உணவுக் குழாயில் இருபுறமும் சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவெடுத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் பிப்ரவரி 8, 2025 அன்று மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின்போது எதிர்பாராதவிதமாக மேல் நோக்கி சிக்கலான பகுதியில் நகர்ந்திருக்கிறது. இது தொடர்பாக சிடி ஸ்கேன் செய்து பரிசோதித்தபோது அந்த எலும்பானது தொண்டையின் மேற்பகுதியான நாசோபாரிங்கஸ் பகுதிக்கு சென்றுவிட்டதை கண்டறிந்திருக்கின்றனர். இது மிக அரிதானது.
இதன் காரணமாகக இரண்டு மணி நேரத்தில் முடிந்திருக்க வேண்டிய அறுவை சிகிச்சை 8 மணி நேரம் வரை நீடித்திருக்கிறது. அறுவை சிகிச்சைக்கு பிறகு ரூபி 21 நாட்கள் டியூப் மூலமே உணவருந்த முடிந்திருக்கிறது. தற்போது வீடு திரும்பியுள்ள ரூபி தனக்கு இவ்வளவு சிரமத்தை ஏற்படுத்திய பிரியாணியை இனி வாழ்நாளில் சாப்பிட மாட்டேன் என உறுதியாக தெரிவித்திருக்கிறார்.