இந்தியாவின் முதன்மை உள்நாட்டு கிரிக்கெட் போட்டியான ரஞ்சி கோப்பையின் இறுதி போட்டியில் விதர்பாவை வீழ்த்தி மும்பை அணி 42வது முறையாக ரஞ்சி கோப்பையை கைப்பற்றியது. மும்பை வாங்கடே மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸ் செய் விளையாடிய விதர்பா அணி 105 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. மும்பை அணியின் பந்துவீச்சில் தனுஷ் கோட்டியான் மற்றும் சம்ஸ் முலானி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதனைத் தொடர்ந்து 119 ரன்கள் முன்னிலையுடன் களம் இறங்கிய மும்பை இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது.
அந்த அணியின் முன்னணி வீரர்களான கேப்டன் அஜிங்கியா ரகானே ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இளம் வீரர் முசீர் கான் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதிப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடிய முசீர் கான் சதம் அடித்தார். அவர் 136 ரன்களில் ஆட்டம் இழந்தார். மேலும் மும்பை அணியின் கேப்டன் அஜிங்கியா ரகானே 73 ரன்களும் ஸ்ரேயாஸ் ஐயர் 95 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். இவர்களது சிறப்பான ஆட்டத்தால் மும்பை அணி இரண்டாவது இன்னிங்ஸில் 418 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இதனைத் தொடர்ந்து 538 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய விதர்பா அணி இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. மிகப்பெரிய வெற்றி இலக்காக இருந்தாலும் விதர்பாணியின் பேட்ஸ்மேன்கள் இலக்கை துரத்தி வெற்றியடைய சிறப்பான போராட்டத்தை முன்னெடுத்தனர். அந்த அணியின் அனுபவ வீரரான கருண் நாயர் 73 ரன்களும் ஹர்ஷ் தூபே 65 ரன்களும் எடுத்தனர். அவர்கள் அணியின் கேப்டன் அக்ஷய் வட்கர் சிறப்பாக விளையாடி சதம் எடுத்தார். அவர் 102 ரன்களுக்கு அவுட் ஆனார்.
மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும் விதர்பா அணி உணவு இடைவேளைக்குப் பிறகு தனது கடைசி 5 விக்கெட்டுகளை 15 ரன்களுக்குள் இழந்து 368 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் மும்பை அணி 169 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 42 ஆவது முறையாக ரஞ்சி டிராபி சாம்பியனாக முடி சூட்டிக்கொண்டது மும்பை அணிக்காக சிறப்பாக பந்து வீசிய தனுஷ் கோட்டியான் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். முசீர் கான் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா இரண்டு விக்கெட் வீழ்த்தினர்.