கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் கடந்த 2006ஆம் ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் கொண்டுவரப்பட்டது. இது 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் என்று அழைக்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் பதிவு செய்தவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் தரப்படுகிறது. இத்திட்டம் மூலம் நாடு முழுவதும் 5.97 கோடி குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளன.
இந்நிலையில், தற்போது நிதிப் பற்றாக்குறையால் 100 நாள் வேலை திட்டம் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 100 நாள் வேலை திட்டத்துக்கு நடப்பு நிதியாண்டில் ரூ.60,000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டதால் எதிர்ப்புகள் எழுந்தன.
2022-23ஆம் நிதியாண்டில் ரூ.89,000 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், 2023-24ஆம் நிதி ஆண்டில் ரூ.60,000 கோடி மட்டுமே மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. ஆனால், 100 நாள் வேலை திட்டத்துக்கு தேவையின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று மத்திய அரசு விளக்கமும் அளித்துள்ளது.