வெளியான 30 ஆண்டுகளை கடந்தும் இன்றும் விவாதப் பொருளாக உள்ள ‘தேவர் மகன்’ படத்தை கமல்ஹாசன் எடுத்ததற்கான முழு காரணம், இறுதிக்காட்சியில் வெளிப்பட்டு இருக்கும்… படித்த இளைஞராக ஊருக்குள் அடியெடுத்து வைக்கும் கமல்ஹாசன் ஒரே சமூகத்தை சேர்ந்த இருவருக்குள் நடக்கும் பங்காளிச் சண்டையால் வெடித்த கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர அரிவாள் பிடித்திருப்பார். நாசரை கொலை செய்த பிறகு ‘புள்ள குட்டிகள படிக்க வைங்கடா’ என்று அவர் பேசிய வசனம் படத்தைப் பார்த்த பலரது மனதில் இன்று வரை நிற்கிறது.
‘மாமன்னன்’ ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், கமல் முன்னிலையிலேயே தேவர் மகன் படத்தை விமர்சனம் செய்தார். ‘மாமன்னன்’ உருவாவதற்கு ‘தேவர் மகன்’தான் காரணம் என்றும் படத்தை பார்த்தபோது தனக்கு ஏற்பட்ட வலி, அதிர்வுகளை கடக்க முடியாமல் தவித்ததாகவும் கூறினார். தேவர் மகனில் நடித்த இசக்கி கதாபாத்திரம்தான் மாமன்னன் என மாரி செல்வராஜ் குறிப்பிட்டார். மாரி செல்வராஜ் பேசியது இணையத்தில் வேகமாக பரவ, அவருக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் எழுந்துள்ளன. தேவர் மகனில் இசக்கி கதாபாத்திரத்தில் நடித்த வடிவேலு கோயில் பூட்டை உடைக்கும்போது, தானும் அதே சமூகத்தை சேர்ந்தவன் எனவும் தென்மதுரை பாண்டியனடா எனவும் பாடியிருப்பார். மாரி செல்வராஜ் குறிப்பிடுவது போல் இசக்கி கதாபாத்திரம் வேறு சமூகத்தை சேர்ந்தவர் இல்லை என்றும் அவரது புரிதல் தவறாக உள்ளது என்றும் பலரும் குற்றச்சாட்டினர்.
அதே நேரத்தில் மாரி செல்வராஜ் பேசியதன் நோக்கம் , ஒரு சமூகத்தால் ஒட்டுமொத்த ஊரும் பாதிக்கப்பட்டது, ஆதிக்க சமூகம் என்ற பெயரில் ஊரையே கலவர பூமியாக மாற்றியது ஆகியவற்றை உணர்த்தவே, என ஆதரவு குரல்களும் எழுந்தன. இந்நிலையில், ‘மாமன்னன்’ திரைப்படம் வெளியான பிறகு தனக்கும், நடிகர் கமல்ஹாசனுக்கும் இடையேயான உரையாடல் முழுமையடையும் என இயக்குநர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.