பிரபல பாலிவுட் நடிகரான சயீஃப் அலிகான், ஜனவரி 16ஆம் தேதி தனது வீட்டில் மர்ம நபர் ஒருவரால் கத்தியால் குத்தப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் வங்கதேசத்தை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். முகமது ஷரீபுல் என்ற அவர், கடந்த 19ஆம் தேதி கைதானார். இந்நிலையில், இவ்வழக்கில் மும்பை போலீசாரால் தவறாக அடையாளம் காணப்பட்டு ஜனவரி 18ஆம் தேதி கைதாகி, அடுத்தடுத்த நாட்களில் விடுதலையான ஆகாஷ் (31) என்பவர், “மும்பை போலீசார் என் வாழ்க்கையே பறிபோய்விட்டது” என்று பரபரப்பு பேட்டியொன்றை அளித்துள்ளார்.
நடந்தது என்ன..?
சயீஃப் அலிகானை கத்தியால் குத்தியது இவர்தான் என்று, கடந்த 17ஆம் தேதி சிசிடிவி காட்சி ஒன்று வெளியானது. அதன் அடிப்படையில், 18ஆம் தேதியன்று, ஆகாஷ் என்பவர் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, 19ஆம் தேதி, வங்கதேசத்தை சேர்ந்த ஷரிபுலை போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து, ‘தவறாக அடையாளம் காணப்பட்டுவிட்டார்’ எனக்கூறப்பட்டு ஆகாஷ் விடுதலை செய்யப்பட்டார். காவல்துறையின் ‘தவறான’ கைது நடவடிக்கையால் ஆகாஷ் தற்போது வேலையை இழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, ஆகாஷ் உள்ளூர் ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், “என்னுடைய புகைப்படத்தை ஊடகங்கள் காண்பித்ததால், என் குடும்பத்தினர் அதிர்ச்சியிலும், கண்ணீரிலும் உள்ளனர். போலீசாரின் ஒரு தவறு, என் வாழ்க்கையை அழித்துவிட்டது. சிசிடிவி-யில் இருந்தவருக்கு மீசை இல்ல. எனக்கு மீசை இருக்கிறது. இதைக்கூடவா போலீசார் கவனிக்கவில்லை.
போலீசாரால் என் வாழ்க்கையே போய்விட்டது..
அன்றைய தினம் நான் எனக்கு பெண் பார்க்க சென்றுகொண்டிருந்தேன். அதற்குள் கைது செய்துவிட்டனர். இதனால், பெண் வீட்டார் என்னை வேண்டாம் என்று சொல்லிவிட்டனர். மற்றொரு பக்கம் நான் வேலை செய்யும் நிறுவனத்தில் ‘இனி நீ வேலைக்கு வரவேண்டாம்’ என சொல்லிவிட்டனர். சம்பவத்தன்று, என் வேலை விஷயமாகவே சயீஃப் அலிகானின் வீடு இருந்த பகுதி அருகே சென்றேன். ஆனால் அன்று நடந்த சம்பவத்தால் நான் என் வாழ்க்கையே போய்விட்டது. எனக்கு எதிர் காலத்தில் திருமணம் நடக்குமா? என்பதும் தெரியவில்லை. இதனால் நடிகர் சயீஃப் அலிகான் வீட்டு முன்பு நின்று நீதி கேட்க போகிறேன்” என்று கூறியுள்ளார்.
மற்றொருபக்கம், கைதான ஷரீபுல்லின் கைரேகை சயீஃப் அலிகானின் வீட்டில் இருந்து சேகரிக்கப்பட்ட 19 கைரேகைகளில், எந்த கைரேகையுடனும் ஒத்துப்போகவில்லை என உயர்மட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், அவரும் உண்மையான குற்றவாளி இல்லையோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.