கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் பகுதியில் அமைந்துள்ள நாகராஜா சுவாமி திருக்கோயில். இந்த கோயிலின் வரலாறு மற்றும் சிறப்புகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கோயில் உருவான வரலாறு ? பெண் ஒருவர் வயலில் நெற்கதிர்களை அறுத்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கதிரில் இருந்து மட்டும் ரத்தம் வெளிப்பட்டுள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உடனடியாக ஊருக்குள் சென்று மக்களிடம் விவரத்தை கூறியுள்ளார். அதைக் கேட்டு திகைத்துப் போன பொதுமக்கள் அந்தப் பெண் கூறிய இடத்திற்கு வந்து பார்த்தனர். அங்கு நெற்கதிர்ர்க்கு கீழே நாகராஜர் வடிவம் இருந்ததை கண்டு அதிசயித்தனர். இதன் பின்னர் நாகராஜரை சுற்றி ஓலைக்குடிசை அமைத்து சிறிய சன்னதி கட்டி வழிபட்டு வந்தனர்.
இந்த கோயில் பற்றி கேள்விப்பட்ட களக்காடு மன்னர் மார்த்தாண்ட வர்மா தன்னுடைய தோல் நோய் குணமாக வேண்டும் என வழிபாடு செய்ய வந்தார். அப்படி வழிபட்டு முடித்ததும் அவர் நோய் நீங்கப் பெற்றார். இதனால் மகிழ்ந்து போன அந்த மன்னர் நாகராஜருக்கு மிகப்பெரிய கோயில் எழுப்பினார். அந்த சுவாமியின் பெயரால் தான் இந்த ஊர் நாகர்கோவில் என அழைக்கப்படுகிறது
கோயில் அமைப்பு : இந்த கோயிலில் அனந்த கிருஷ்ணர், காசி விஸ்வநாதர், பாலமுருகன் ஆகியோரது சன்னதிகளும் உள்ளது. இதில் அனந்த கிருஷ்ணர் சன்னதி கொடி மரத்தில் கருடனுக்கு பதிலாக ஆமை வடிவமைக்கப்பட்டுள்ளது. பாம்பும் கருடனும் எதிரிகள் என்பதால் கருடனை கொடி மரத்தில் வடிவமைக்காமல் ஆமையை வடிவத்துள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்தக் கோயிலில் ஐந்து தலைகளுடன் கூடிய நாகராஜர் மூலஸ்தானத்தில் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இந்த கோயிலில் தர்ணேந்திரன் என்ற ஆண் பாம்பும், பத்மாவதி என்ற பெண் பாம்பும் துவாரபாலர்களாக இருப்பது சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதேபோல் நாகராஜர் சன்னதிக்கு எதிரே இருக்கும் தூணில் சிற்ப வடிவில் நாககன்னி இருக்கிறார்.
இந்தக் கோயிலில் இப்போதும் பாம்புகள் வசிப்பதாகவும், அவை தான் இந்த கோயிலை பாதுகாத்து வருவதாகவும் நம்பப்படுகிறது. பாம்புகள் வசிப்பதற்கு ஏற்ப மூலஸ்தானம் ஆனது ஓலைக்கூரையால் வேயப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் இதனை பிரித்து புதிய கூரை வேயும் பணியானது நடைபெறுவது வழக்கம். இந்தப் பணிகளை நாகராஜருக்கு பூஜை செய்யும் அர்ச்சகர்களே செய்கின்றனர். இந்த கோயிலில் நாகராஜர் இந்த இடம் மணல் திட்டாகவே எப்போதும் இருக்கும். முன்பு வயல் இருந்த இடம் என்பதால் இந்த இடத்தில் நீர் ஊறிக் கொண்டே இருக்கும் இந்த நீருடன் சேர்ந்த மணல் தான் பிரசாதமாக வழங்கப்படும்.
Read more:கதவின் பின்னால் துணிகளைத் தொங்கவிடுகிறீர்களா..? வாஸ்து சொல்வதை கேளுங்க..