நாகர்கோவில் அருகே பேய் விரட்டும் மந்திரவாதி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நாகர்கோவிலில் வடசேரியை அடுத்துள்ள மேலகலுங்கடி பகுதியைச் சார்ந்தவர் மணிகண்டன். இவர் அந்த பகுதிகளில் மாந்திரீக வேலைகளை செய்து வருவதாக மக்களிடம் கூறி பிழைப்பு நடத்தி வந்திருக்கிறார். நாகர்கோவிலை சார்ந்த 55 வயது கூலி தொழிலாளி ஒருவர் தன் மனைவியை இவரிடம் பேய் விரட்டுவதற்காக அழைத்து வந்திருக்கிறார்.
இதற்காக அடிக்கடி பூஜை செய்ய வேண்டியிருப்பதாக கூறி தொழிலாளியின் வீட்டிற்கு வந்திருக்கிறார் மந்திரவாதி மணிகண்டன். இந்நிலையில், கூலி தொழிலாளியின் மூத்த மகள், தனக்கு அடிக்கடி வயிறு வலிப்பதாக கூறவே அவரை ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இருக்கின்றனர்.
அந்தச் சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறி எல்லோரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கின்றனர். இதனால் அதிர்ச்சியும், ஆத்திரமுமடைந்த பெற்றோர், சிறுமியிடம் விசாரித்ததில் தன் தாய்க்கு குணமாக வேண்டும் என்று கூறி மந்திரவாதி அந்த சிறுமியை அழைத்துச் சென்று பிஸ்கட் மற்றும் சாக்லேட்டுகள் வாங்கிக் கொடுத்து பாலியல் பலாத்காரம் தொடர்ந்து செய்து வந்தது தெரியவந்திருக்கிறது.
இதனையடுத்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட புகாரின் பேரில் மந்திரவாதி மணிகண்டனை கைது செய்த போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தனர்.