தமிழ்நாடு பாஜக மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பாஜக தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாஜக மாநில தலைவராக தேர்வாகும் நபர் நாளை பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கமலாலயத்தில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு வந்த நயினார் நாகேந்திரனுக்கு அவரது ஆதரவாளர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே, சென்னையில் அமித்ஷாவின் செய்தியாளர் சந்திப்பு நடைபெற இருந்த மேடையில் இருந்த பேனர் மாற்றப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது. இன்று பாஜக கூட்டணி கட்சிகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என முதலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்ற பேனர் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், கூட்டணி கட்சி தலைவர் பங்கேற்காததால், அந்த பேனர் மாற்றப்பட்டு தமிழ்நாடு பாஜக என்று மட்டுமே இடம்பெற்றுள்ளது. அந்த பேனரில் நயினார் நாகேந்திரனின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.