குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் மார்கரெட் ஆல்வா போட்டியிடுவார் என தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனால் இன்று குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் பாஜக கூட்டணி சார்பாக திரௌபதி முர்முவும், எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் குடியரசு துணைத் தலைவர் தேர்தல் வரும் ஆகஸ்ட் 6-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய துணை ஜனாதிபதி பதவிக்கு ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக ஜக்தீப் தங்கரை சனிக்கிழமை அறிவித்தது. ஜக்தீப் தங்கர் தற்போது மேற்கு வங்க ஆளுநராக பணியாற்றி வருகிறார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக தலைவர் ஜேபி நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங், பாஜக தேசிய பொதுச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் கலந்துகொண்ட பாஜக நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் சார்பில், காங்கிரஸைச் சேர்ந்த மார்கரெட் ஆல்வா போட்டியிடுவார் என தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். மார்கரெட் ஆல்வா கர்நாடக மாநிலம், மங்களூருவைச் சேர்ந்தவர். முன்னதாக குஜராத், ராஜஸ்தான், உத்தரகாண்ட் மாநில ஆளுநராகவும் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read: “சூப்பர் நியூஸ்” தொழில் நிறுவனங்கள் QR கோட் வாயிலாக வெளியிடுவதை அனுமதித்த மத்திய அரசு…..!