நடிகர் முத்துராமனின் மகன் என்றுதான் திரைக்கு அறிமுகமானார் கார்த்திக். பிறகு, கார்த்திக் அப்பா தான் பழம்பெரும் நடிகர் முத்துராமன் என்று சொல்லும் அளவுக்கு, தனித்துத் நின்றவர் தான் கார்த்திக். 80ஸ், 90ஸ்-ல் கொடிகட்டி பறந்தார்.
கார்த்திக்கின் இயற்பெயர் முரளி. பாரதிராஜா காரில் வந்துகொண்டிருந்தபோது, எதிரே சைக்கிளில் வந்த சிறுவன் காரில் மோதி லேசாக அடிபட்டது. அவனை காரில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிட்டு, பாரதிராஜா மரத்தடியில் நின்று கொண்டிருந்தார். அடுத்தநாள் ஷூட்டிங் செல்லவேண்டிய அந்தப் புதிய படத்துக்கு நாயகன் மட்டுமே கிடைக்கவில்லை.

அப்போது அருகில் உள்ள வீட்டு போர்டிகோ பகுதியில், விளையாடிக்கொண்டிருந்த ஒரு பையனைப் பார்த்தார். பையனைப் பார்த்ததும் உற்சாகமானார். ‘முத்துராமனின் மகன்’ என்று அறிந்ததும் அன்றிரவே பேசி, ஓகே செய்து, அடுத்தநாள் காலையில், குமரிமாவட்டத்துக்கு ரயிலில் ஏற்றிக் கொண்டு வரச்செய்தார். முரளி – கார்த்திக் ஆனார். அந்தப் படம் ‘அலைகள் ஓய்வதில்லை’ அதில் தொடங்கி இன்று வரை அவருக்கென்று தனி ரசிகர்களை உருவாக்கினார்.
கார்த்திக் கடைசியாக 2018 இல் தனது மகன் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து ‘மிஸ்டர் சந்திரமௌலி’ திரைப்படத்தில் ஒரு முழு நீள வேடத்தில் நடித்தார். அதைத் தொடர்ந்து திரைப்படங்களில் முக்கிய வேடத்தில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.

இந்நிலையில் ‘தளபதி 67’ படத்தில் வில்லனாக நடிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இவரை அணுகியதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், நடிகர் தனது உடல்நிலையை காரணம் காட்டி இந்த வாய்ப்பை நிராகரித்ததாக கூறப்படுகிறது. அவருக்கு காலில் பிரச்சனை இருப்பதால் நீண்ட நேரம் நிற்கமுடியாதாம். இப்படி இருக்கையில் வில்லனாக நடித்தால் ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்க வேண்டி இருக்கும், அதனால் அந்த பிரச்சனை பெரிதாகிவிடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு தான் நடிக்க மறுத்துவிட்டாராம் கார்த்திக். இது குறித்து படக்குழுவினர் எந்த தகவலையும் வெளியிடவில்லை.