தென்காசி அருகே ஜாமீனில் வெளியே வந்த நபர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள ஊர் தேவிபட்டனம். இந்த ஊரைச் சார்ந்த கருப்பையா என்பவரது மகன் செல்வகுமார் வயது 40. இவர் ஒரு கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த பதினொன்றாம் தேதி தான் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் வழக்கு விசாரணையில் ஆஜராவதற்காக சிவகிரி நீதிமன்றத்திற்கு தன்னுடைய மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் செல்வகுமார் அப்போது அங்குள்ள அரசு மருத்துவமனை அருகே மர்ம கும்பல் ஒன்றே செல்வகுமாரை சுற்றி வளைத்தது.
அவர்களிடமிருந்து தப்பிச் செல்வதற்காக அரசு மருத்துவமனையின் காம்பவுண்ட் சுவரை ஏரி குதித்து அங்குள்ள வயல்வெளி வழியாக தப்பிச் செல்ல முயன்று இருக்கிறார் ஆனாலும் விடாத கும்பல் இவரை சுற்றி வளைத்து சரமாரியாக வெட்டிக் கொன்றது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவரது உடலை கைப்பற்றி சிவகிரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை வழக்கில் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறை தீவிரமாக தேடி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு தேவி பட்டணத்தைச் சார்ந்த சிவக்குமார் என்பவரை செல்வகுமார் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்த செல்வக்குமாரை சிவகுமாரின் நண்பர்கள் பழிக்கு பழியாக கொலை செய்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது எனினும் இந்த கொலைக்கான உண்மை காரணங்களை அறிய காவல் துறை தீவிரமான விசாரணையில் இறங்கியுள்ளது